June 10, 2023
டாப் 15

உலகிலேயே அதிக விலை கொண்ட டாப் 15 பழங்கள் ! என்ன காரணம்

உலகம் முழுவதும் ஏராளமான பழங்கள் காணப்படுகிறது. இந்த பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான சுவையும், நிறமும், உருவமும் கொண்டிருக்கும். ஒரு சில பார்ப்பதற்கு கண்ணைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும். இதில் சில பழங்கள் மிக அதிக அளவிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படக்கூடிய பதினைந்து பழங்களை பற்றி பார்ப்போம்.

1. பிஜின்-ஹைம் ஸ்ட்ராபெரி (Bijin-hime Strawberry)

இந்த ஸ்ட்ராபெரி வகைகள் மற்ற ஸ்ட்ராபெர்ரி வகைகளை விட கொஞ்சம் பெரியது. இது ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு பருவத்தில் 500 மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஸ்ட்ராபெர்ரியில் ஒன்று 100 கிராமுக்கு மேல் எடை உள்ளதாக வளர்க்கப்படுகிறது. பாரம்பரிய ஸ்ட்ராபெர்ரியை விட இது மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். இந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஜப்பானில் விளைவிக்கப்படுகிறது. இது சந்தையில் ஒரு ஸ்ட்ராபெரி 4000 டாலருக்கு விற்கப்படுகிறது. நம்முடைய தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 29500 ரூபாய்.

2. நார்தேர்ன் டெரிட்டோரி மேங்கோஸ் (Northern Territory Mangos)

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் இந்த மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த மாம்பழங்கள் அதிக விலை உயர்ந்த பழங்களாக இருப்பதற்கு காரணம் அதிக அளவில் விளைவிக்கப்படாமல் இருப்பது. இதில் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்த மாம்பழங்கள் மூலமாக வரக்கூடிய வருமானங்கள் அனைத்தும் இரண்டு குழந்தைகள் தொண்டு நிறுவனங்களுக்கு செல்கின்றது. இந்த ஆஸ்திரேலிய மாம்பழம் ஒன்றின் விலை 4116 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3 லட்சம்களுக்கும் அதிகம்.

3. கார்ன்வால் பைனாப்பிள் (Cornwall Pineapple)

இந்த அன்னாசிப்பழம் மிக வித்தியாசமான முறையில் வளர்க்கப்படுகிறது. அதாவது இந்த பழம் மிகவும் சுவையாக இருப்பதற்கு வைக்கோல், அவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான உரம், சிறுநீர் இப்படி வித்தியாசமான வழிமுறைகளை பயன்படுத்தி வளர்க்கப்படுகிறது. இந்த அன்னாசிப் பழமும் மிக மிக குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகிறது. இந்த அன்னாசிப்பழம் ஒன்றின் விலை 1,600 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் 118000 ரூபாய்.

4. ரூபி ரோமன் கிரேப்ஸ் (Ruby Roman Grapes)

இந்த திராட்சை இனத்தின் சிறப்பு என்னவென்றால் அதிக சர்க்கரை உள்ளடக்கமும், குறைந்த அமிலத்தன்மையும் கொண்டதாம். இது உலகின் மிகப் பழமையான திராட்சை வகைகளில் ஒன்று என கூறப்படுகிறது. இந்த திராட்சை ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது. மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய அளவில் இதனுடைய விலை இருக்கிறது. இந்த திராட்சை ஒன்றின் விலை 400 டாலர்கள். தற்போதைய இந்திய மதிப்பில் 29000 ரூபாய். ஒரு கொத்து திராட்சை 11,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

5. டென்சுக் வாட்டர் மெலன் (Densuke Watermelon )

டென்சுக் தர்பூசணி சராசரி தர்பூசணியை விட மிக மிக அதிக அளவில் சுவை கொண்டதாக இருக்குமாம். அதுமட்டுமில்லாமல் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை தரக்கூடியதாம். ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடக்கூடிய இந்த விலை உயர்ந்த பழங்களை வாங்குவதற்கு ஒரு கூட்டம் எப்பொழுதும் தயாராகவே இருக்குமாம். பணம் அதிகம் இருப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இதன் விலை எவ்வளவு தெரியுமா ஒரு தர்பூசணிக்கு 250 டாலர்கள். நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பில் 18000 ரூபாய்.

6. யூபரி கிங் மெலன் (Yubari King Melon)

இந்த அதிக விலை கொண்ட முலாம்பழம் வித்தியாசமான இனிப்பு சுவை கொண்டுள்ளதால் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த அதிக விலை கொண்ட முலாம்பழம் ஜப்பானின் ஹொக்கைடோவில் வளர்க்கப்படுகிறது. இதனுடைய தோல் மற்ற முலாம் பழங்களை விட மிகவும் மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமில்லாமல் இந்த முலாம் பழங்கள் வித்தியாசமான முறையில் எரிமலை சாம்பலில் பசுமை குடில்களில் வளர்க்கப்படுகிறது. இதை அறுவடை செய்யப்பட்ட இரண்டு மூன்று நாட்களுக்குள் சாப்பிட வேண்டுமாம். இதனால் ஜப்பானுக்கு வெளியே இதை கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். இந்த முலாம்பழம் ஒன்றின் விலை என்ன தெரியுமா? 200 டாலர்கள். நம்முடைய இந்திய மதிப்பில் 14000 ரூபாய்.

7. சதுர தர்பூசணி (Square Watermelon)

நம்முடைய நாட்டில் வரக்கூடிய நாம் பொதுவாக வாங்கக்கூடிய தர்பூசணிகள் எல்லாம் உருண்டை வடிவில் காணப்படும். ஆனால் இந்த வகை தர்பூசணிகள் சதுர வடிவில் காணப்படும் இருந்தாலும் இதன் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காதாம். இது விலை உயர்ந்ததாக இருக்க காரணம் இதனுடைய வடிவம். சதுர வடிவில் இதை உற்பத்தி செய்து எடுப்பதற்கு அதிக உழைப்பு தேவைப்படுவதால் விலையும் அதிகமாக இருக்கிறது. ஒரு சதுர தர்பூசணியின் விலை 200 டாலர்கள். நம்முடைய இந்திய மதிப்பில் 14000 ரூபாய்.

8. டையோ நோ தமாகோ மாங்கோஸ் (Taiyo no Tamago Mangos)

ஜப்பானில் இந்த மாம்பழங்கள் பிரபலம். ஒரு மாம்பழம் குறைந்தது 350 கிராம் எடையுள்ளதாக இருக்கும். இந்த மாம்பழத்தின் தோலில் பாதிக்கும் மேற்பகுதி அடர் சிவப்பு நிறமாக காணப்படும். இந்த மாம்பழம் மிகவும் இனிமையாக வித்தியாசமான சுவையை கொண்டிருக்குமாம். இந்த மாம்பழம் ஒன்றின் விலை 50 டாலர்கள். நம்முடைய இந்திய மதிப்பில் சுமார் 3500 ரூபாய்.

9. செம்பிகியா மஸ்க்மெலன் (Sembikiya Muskmelon)

இந்த முலாம் பழத்தின் விலை 150 டாலர்கள். இந்திய மதிப்பில் 11000 ரூபாய். இந்த முலாம்பழங்கள் ஜப்பானின் சிசி ஷிஜுயோகாவில் வளர்க்கப்படுகின்றன. இந்த இடத்தின் காலநிலை மிகவும் உஷ்ணமாக வெயில் நிறைந்ததாக காணப்படும். வெப்பத்தை தவிர்த்து குளிர்ச்சியான சூழ்நிலையில் வளர்ப்பதற்காக இந்த மூலாம்பழங்கள் விளைவிக்க கூடிய இடங்களில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குளிர்ச்சியாக வைப்பதற்கு ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஹீட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் வாசனையும் மிகவும் வித்தியாசமாக இருக்குமாம்.

10. சேகாய்-இச்சி ஆப்பிள் (Sekai-ichi Apple)

இந்த ஆப்பிள் ஒன்றின் விலை 21 டாலர்கள். இந்திய மதிப்பில் 1500 ரூபாய். ஜப்பானில் விற்கப்படக்கூடிய இந்த ஆப்பிள் இவ்வளவு விலை போக காரணம் இதனுடைய வித்தியாசமான செயல்முறை. இந்த ஆப்பிள் தேனில் மூழ்க வைத்து எடுக்கப்பட்டு வித்தியாசமான வழிமுறைகள் மூலம் அதனுடைய சுவை கூட்டப்படுகிறது. வித்தியாசமான சுவையை கொடுப்பதன் காரணமாக இதனுடைய விலையும் அதிகமாக இருக்கிறது. இது 1984 ஆம் ஆண்டு ஜப்பானில் விளைவிக்கப்பட்டு முதன் முதலில் வெளிவந்த ஆப்பிள். இது மிகப்பெரிய வகையாக கருதப்படுகிறது. இதனுடைய சராசரி சுற்றளவு முப்பதிலிருந்து 46 சென்டிமீட்டர் வரை இருக்கும். இது 900 கிராம் எடை வரை இருக்கும். சேகாய் இச்சி என்றால் ஜப்பானிய மொழியில் உலகின் நம்பர் ஒன் என்று பொருள்.

11. டெக்கோபன் சிட்ரஸ் (Dekopon Citrus)

இந்த ஆரஞ்சு ஒன்றின் விலை 13 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 950 ரூபாய். இது விதைகள் அற்ற மிகவும் இனிப்பு சுவை கொண்ட ஒரு ஆரஞ்சு வகை. இது கியோமி மற்றும் போங்கன் ஆகியவற்றுக்கிடையிலான ஒரு கலப்பினம். 1972ஆம் ஆண்டு ஜப்பானில் உருவாக்கப்பட்டது. இந்த பழங்கள் பொதுவாக மிகப்பெரிய பசுமை குடில்களில் வளர்க்கப்படுகிறது. இந்த பழத்தில் சிட்ரிக் அமிலத்தின் அளவு குறைவாக இருக்கும். சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் இதன் சுவையும் வித்தியாசமாக அற்புதமாக இருக்குமாம்.

12. ஒயிட் ஜிவெல் ஸ்ட்ராபெர்ரி (White Jewel Strawberry)

வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த ஸ்ட்ராபெரியின் ஒன்றின் விலை 10 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 700 ரூபாய். இந்த ஸ்ட்ராபெர்ரியின் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்குமாம். இதை முதலில் சுவைக்கும் பொழுது சுவை இல்லாதது போல இருக்குமாம். ஆனால் நீங்கள் சாப்பிட்ட பிறகுதான் அதனுடைய சுவையே உங்களுக்கு தெரியுமாம். இந்த ஸ்ட்ராபெரி ஜப்பானில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

13. புத்தா ஷேப்ட்டு பியர் (Buddha Shaped Pear)

இந்த புத்த வடிவ பேரிக்காய் ஒன்றின் விலை 9 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 650 ரூபாய்கள். இந்த பேரிக்காய் சீனாவின் ஹெபாய் மாகாணத்தில் வளர்க்கப்படுகிறது. இந்த சித்தர் பேரிக்காயை சியான்ஷாங் ஹாவ் என்பவர் முதலில் வளர்த்துள்ளார். இப்படி புத்தர் வடிவில் இதை கொண்டுவருவதற்கு அச்சுக்களை அவர் பயன்படுத்தியுள்ளார். இப்படி அவர் நினைத்த வகையில் புத்தர் முகத்தை கொண்டு வருவதற்கு ஆறு வருடங்கள் ஆகியிருக்கிறது. புத்தர் முகத்தைக் கொண்ட இந்த சிறிய பேரிக்காயை வாங்குவதற்கு பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

14. செம்பிகியா குயீன் ஸ்ட்ராபெர்ரி (Sembikiya Queen Strawberries)

இந்த ஸ்ட்ராபெர்ரி பிடித்தமானவர்களுக்கு பரிசளிக்கும் வகையில் ஜப்பானியர்களின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஸ்ட்ராபெரி ஒன்றின் விலை 7 டாலர்கள். இந்திய மதிப்பில் 500 ரூபாய். இந்தப் பழம் நல்ல இனிமையான சுவையோடு நல்ல சிவப்பாக காணப்படும். ஜப்பானில் உள்ள மிகப் பழமையான பழக்கடையான செம்பிகியா பெயரில் இந்த ஸ்ட்ராபெர்ரி அழைக்கப்படுகிறது.

15. செம்பிகியா செர்ரி (Sembikiya Cherry)

இந்தச் செம்பிகியா செர்ரி பழமும் செம்பிகியா பழக்கடை நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த செர்ரிப்பழம் ஒன்றின் விலை 4 டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 300 ரூபாய். இந்த செர்ரி பழங்கள் அனைத்தும் சம அளவில் ஒரே நிறத்திலும் காணப்படும். இப்படி வளர வைப்பதற்கு இது பசுமை குடில்களில் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு செர்ரியும் தனியாக கண்காணிக்கப்பட்டு சரியான அளவில் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இதனால்தான் இதனுடைய விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.

Related posts

1 comment

Siva Kumar May 7, 2021 at 12:03 pm

Good one

Reply

Leave a Comment