January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் ஆமை இனம்! ஆமைகள் பற்றி நீங்கள் அறிந்திராத 90% தகவல்கள்

ஆமைகள் பற்றிய நீங்கள் அறிந்திராத வித்தியாசமான ஒரு சில தகவல்களை பற்றி நாம் பார்ப்போம்.

ஆமைகள் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகத்தில் வாழ்ந்து வருகிறது. உலகில் உள்ள பல்லிகள், பறவைகள், பாலூட்டிகள், முதலைகள் மற்றும் பாம்புகளை விட அதற்கு முன்னமே வாழ்ந்து வருகிறது.

ஒரு சில ஆமைகள் 100 வயதிற்கு மேல் வாழக்கூடியது. ஹாரியட் என்ற ஆமை ஆஸ்திரேலியா உயிரியல் பூங்காவில் 2006 வரை உயிர் வாழ்ந்தது. அது இறந்த பொழுது அதனுடைய வயது 175.

ஆமைகள் இனப்பெருக்கம் செய்ய போதுமான வெப்பமான சூழ்நிலை உள்ள காலநிலைகளில் வாழும். அண்டார்டிகாவைத் தவிர அனைத்துக் கண்டங்களிலும் ஆமைகள் வாழ்கிறது.

ஆமைக்கு அதிக பாதுகாப்பு கொடுப்பது அதனுடைய ஓடு. இந்த ஆமை ஓடு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 60 எலும்புகளைக் கொண்டது.

வெப்பமான இடங்களில் இருக்கக்கூடிய ஆமைகளை விட குளிரான பகுதிகளில் இருக்கக்கூடிய ஆமைகளின் ஓடுகள் மிக லேசாக மெல்லியதாக இருக்கும்.

கலபகோஸ்,அல்தாப்ரா, சுல்கட்டா ஆகிய ஆமை இனங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. மேலும் இதனுடைய எடை 100 கிலோ கிராம் வரை இருக்கும். 200 கிலோ எடையும் 1.2 மீட்டர் நீளமும் வளரக்கூடிய கலபகோஸ் (Galapagos) மிகப்பெரிய ஆமை இனமாகும்.

பல ஆமை இனங்களில் ஆண் ஆமையை விட பெண் ஆமை மிகப் பெரியதாக இருக்கும். ஆல்டாப்ரா(Aldabra) இன ஆமைகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைவதற்கு 25 லிருந்து 30 ஆண்டுகள் வரை ஆகும். இதன் பிறகு இது இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்.

முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் பட்டியலில் ஆமை மிகவும் ஆபத்தான அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் இருந்து வருகிறது. ஆமைகளின் இயற்கை வாழ்விட அழிப்பு, சட்டவிரோதமாக அதிகளவில் ஆமைகளை வேட்டையாடுதல், தண்ணீர் மாசுபாடு காரணங்கள் இப்படிப்பட்ட காரணங்களால் மிக வேகமாக ஆமை இனங்கள் அழிந்து வருகின்றன. 330 வகையான ஆமை இனங்களில் ஏராளமான இனங்கள் ஆபத்தான பட்டியலில் உள்ளது.

ஆசியாவின் சில பகுதிகளில் சில ஆமை இனங்களின் உறுப்புகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என நம்பப்படுகிறது. இதனால் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கானவை வேட்டையாடப்படுகிறது. சில வகை ஆமைகள் தாய்லாந்தின் கள்ளச் சந்தைகளில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டாலருக்கு விற்கப்படுகிறது. இந்த வகை ஆமைகள் வியட்நாம் மற்றும் லாவோஸில் உள்ள இயற்கை வாழிடங்களில் வெறும் 2300 மட்டுமே எஞ்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆமைகள் 1.2 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக அதாவது நான்கு அடி நீளம் வரை வளரக்கூடியது. ஆமை மிகவும் அமைதியான உயிரினம். அதுமட்டுமல்லாமல் மிகவும் மெதுவாக நகரக் கூடியது. இது சராசரியாக மணிக்கு 0.2 லிருந்து 0.5 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்.

ஆமை தலையை எப்படி உள்ளிழுக்கிறது என்பதைப் பொறுத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. தலையை நேராக பின்னே இழுத்துக்கொள்வதை ஒரு வகையாகவும். தலையை திருப்பி பக்கவாட்டில் வைத்து இழுத்துக் கொள்பவை இன்னொரு வகையாகவும் கூறப்படுகிறது.

ஓட்டின் மேல் பகுதி கார்பேஸ் என்றும் அடிப்பகுதி பிளாஸ்ட்ரான் என்றும் அழைக்கப்படுகிறது. இருபுறமும் ஒரு பாலம் போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டின் மேல் பகுதியில் கார்பேஸில் ஸ்கூட்ஸ் என அழைக்கப்படக் கூடிய செதில்கள் உள்ளது. ஆமையின் ஓடுகள் காயம் அடையாமல் இந்த ஸ்கூட்ஸ்கள் பாதுகாக்கிறது. ஆமைகள் தங்களுடைய தலை, கால், வால் ஆகிய மொத்த பகுதியையும் ஓட்டுக்குள் மறைக்க முடியும்.

ஆமையின் ஓட்டிற்குள் தோள்பட்டை எலும்பு, விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்புகள் உள்ளது. ஆமையின் ஓடுகள் அதிக அளவிலான உணர்திறன் கொண்டது. ஆமையின் ஓட்டில் நீங்கள் மென்மையாக தொட்டால் கூட அதனால் உணர முடியும். ஆமையின் வயதை அதன் மேல் ஓட்டில் இருக்கக்கூடிய செதில்கள் போன்ற அடையாளத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. கடினமான தாடைகளை பயன்படுத்தி உணவை மென்று சாப்பிடுகிறது.

ஆமைகள் குளிர் இரத்த வகையை சேர்ந்தது. இயற்கை சூழலில் இருந்து வெப்பத்தை பெறுகிறது. இதனால்தான் ஆமைகள் சூரிய ஒளியை அதிகம் விரும்புகிறது.

ஆமைகள் மனிதர்களைப்போல பகலில் மிகவும் சுறுசுறுப்பாகவும் இரவில் நல்ல தூக்கத்தையும் மேற்கொள்கிறது. பெரும்பாலான ஆமைகள் குளிர்காலத்தில் உறக்க நிலையில் இருக்கும்

பெரும்பாலான ஆமை இனங்கள் தாவரங்களை சாப்பிடுபவை. ஒரு சில இனங்கள் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு. அவைகள் மாமிச பட்சிகளை உண்கிறது.

ஆமைகள் பெரும்பாலும் தனிமையாக இருக்க விரும்பும். ஆமைகள் உண்ணும் உணவிலிருந்து அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.

தென்னமெரிக்காவில் உள்ள சிவப்பு கால் ஆமை மற்றும் மஞ்சள் கால் ஆமைகள் பெரும்பாலும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.

இந்திய நட்சத்திர ஆமை இந்தியா மற்றும் இலங்கையில் மிக வேகமாக அழிந்து வரக்கூடிய ஒரு இனம்.

பான்கேக் எனப்படும் ஆமையின் ஓடு மிகவும் தட்டையாக காணப்படும். இது கென்யா மற்றும் தான்சானியாவை பூர்வீகமாகக் கொண்டது.

பெண் ஆமைகள் ஒரே நேரத்தில் 30 முட்டைகள் வரை இடும். ஆழமாக குழி தோண்டி அதற்குள் முட்டையை போடும். முட்டைகளை 90லிருந்து 120 நாட்கள் அடைகாக்கும்.

ஆமை கிரேக்கக் கடவுளான ஹெர்ம்ஸின் அடையாளச் சின்னம்.

Related posts

Leave a Comment