புருண்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட நாடு. இது வடக்கே ருவாண்டா, கிழக்கு மற்றும் தெற்கில் தான்சானியா மற்றும் மேற்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளை எல்லையாக கொண்டுள்ளது. இங்குள்ள நிலப்பரப்பு பெரும்பாலும் மலைப்பாங்கானது.
புருண்டி முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியாலும், முதல் உலகப் போருக்குப் பிறகு பெல்ஜியர்களாலும் காலனித்துவப்படுத்தப்பட்டது. கடைசியாக 1962 இல் சுதந்திரம் பெற்றது. ஆனால் அதன் பின்னர் உள்நாட்டுப் போர்கள் மற்றும் இனப்படுகொலைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இப்பொழுது மிகவும் வறுமையில் உள்ளது. உலகின் மிக மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று தான் இந்த புருண்டி.
புருண்டி 1996 ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றது. வெனுஸ்டே நியோங்காபோ 5000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் புருண்டி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஏழை நாடு என்ற பெருமையைப் பெற்றது.
மொரிஷியஸ் மற்றும் ருவாண்டாவிற்கு அடுத்தபடியாக ஆப்பிரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது நாடாக புருண்டி உள்ளது.
விவசாயம் மற்றும் அதிகப்படியான மேய்ச்சல் காரணமாக தொடர்ந்து புருண்டியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு வருகிறது. புருண்டியின் பெரும்பான்மையான மக்கள் மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாழ்கின்றனர். 90 சதவிகித மக்கள் விவசாயம் செய்கின்றனர்.
கடுமையான வறுமையின் காரணமாக இங்குள்ள மக்கள் அனைவரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழ்மை காரணமாக இங்குள்ள மக்களுக்கு புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் மிகவும் குறைவாகவே கிடைக்கிறது.
உலகிலுள்ள மகிழ்ச்சியற்ற நாடுகளில் புருண்டியும் ஒன்று. 2019ஆம் ஆண்டு ஐநா வெளியிட்ட உலகில் உள்ள மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் புருண்டி 145 வது இடத்தில் உள்ளது.
புருண்டியில் வாழைப்பழ பீர் மிகவும் பிரபலமானது. கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளைப் போலவே புருன்டியர்களும் வாழைப்பழ பீர் தயாரிப்பதில் பெயர் பெற்றவர்கள். இந்த பீர் புளித்த பிசைந்த வாழைப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இங்குள்ள மக்கள் பீர் அருந்தும் விதமே வித்தியாசமானது. ஒரு மிகப்பெரிய பீர் பானையில் சுற்றி ஏராளமான மக்கள் இருந்து நீண்ட ஸ்ட்ரா போன்ற குழாயை பயன்படுத்தி பீரை உறிஞ்சி குடிக்கிறார்கள்.
புருண்டி மக்களுக்கு கால்நடைகள் ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு போன்றவற்றின் சின்னமாக இருக்கிறது. பாரம்பரியமாக ஒருவர் எவ்வளவு மாடுகளை வைத்திருக்கிறாரோ அதன் அடிப்படையில் அந்த நபர் செல்வந்தராக கருதப்படுகிறார். இங்கு பசுவின் கொம்புகள் புனிதமானதாக கருதப்படுகிறது. ஒரு மாடு இறந்தவுடன் அதன் இறைச்சியைச் சாப்பிட்டு வீட்டின் அருகே உள்ள மண்ணில் மாட்டின் கொம்புகள் நடப்படுகிறது. இதனால் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதாக நம்புகிறார்கள்.
அதிக மக்கள் தொகை, வேலையின்மை, அதிக அளவு வறுமை காரணமாக இங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேலும் அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் இங்குள்ளார்கள். அருகில் இருக்கும் பிற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் விபச்சாரத்திற்காக கடத்தப்படுகிறார்கள். இங்குள்ள குழந்தைகளும் அடிமை தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய ஒரு சோகமான நிகழ்வாக இருக்கிறது.
புருண்டியில் மனிதர்களை சாப்பிடும் குஸ்டாவ் என்ற முதலை ஒன்று உள்ளது. இது உலகின் மிகப்பெரிய முதலை எனவும் சொல்லப்படுகிறது. இது 18 அடி நீளமும் 2 ஆயிரம் பவுண்டுகள் இருக்கும் என சொல்கிறார்கள். இது அங்குள்ள ருசிசி நதி மற்றும் டாங்கனிகா ஏரியில் வசிக்கிறது. இது 300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது.
புருண்டியில் காலையில் உங்களுடைய நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நடைப்பயிற்சி செல்ல முடியாது. 2014ஆம் ஆண்டு அங்குள்ள ஜனாதிபதி இப்படி குழுவாக நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்துவார்கள் என கருதப்பட்டதால் ஜனாதிபதி குழுவாக நடைப்பயிற்சி செய்வதை தடை செய்தார்.
புருண்டியில் ஊடகங்கள் மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. அங்கு அரசு நடத்தக்கூடிய ஊடகங்கள் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்துகிறது. ஊடகவியலாளர்கள் கடுமையான சட்டங்கள் கீழ் அடக்கி வைக்கப்படுகிறார்கள். மேலும் தொடர்ந்து துன்புறுத்தலையும் எதிர்கொள்கிறார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு பல வானொலி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் தேர்தல் செப்டம்பர் 8, 1961 அன்று நடந்தது. சுதந்திரத்திற்கு முன் புருண்டி ருவாண்டா-உருண்டி என்று அழைக்கப்பட்டது. முதல் பிரதமர் லூயிஸ் ரவாகசோர், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களில் படுகொலை செய்யப்பட்டார். புருண்டியின் தலைநகர்-புஜும்பராவில் மிகப்பெரிய துறைமுகம் உள்ளது. இரண்டாவது பெரிய நகரமாக கிடேகா உள்ளது. இங்குள்ள மக்கள் இறைச்சி உண்பது மிகவும் குறைவு. சராசரியாக இரண்டு சதவிகிதம் மட்டுமே இறைச்சி உண்கிறார்கள்.
புருண்டி தி ட்வா, ஹுடு மற்றும் டுட்ஸி மக்களின் தாயகமாக குறைந்தது ஐநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டில் பெரும்பான்மையான ஹூட்டுக்கள் (85%) மற்றும் சிறுபான்மை துட்சிகள் (14%) இடையே தொடர்ச்சியான தகராறு மற்றும் மோதல்கள் உள்ளன. 2003 ஆம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹூட்டுக்கள் குட்டையாகவும், சதுரமாகவும் இருந்த விவசாய மக்களாக இருந்தனர், அதே சமயம் டுட்சிகள் உயரமான மற்றும் மெலிந்த கால்நடைகளை வைத்திருக்கும் உயரடுக்கு மக்கள்.
ஹேஹா மலை புருண்டியின் மிக உயரமான இடம். இது 8,806 அடி உயரம் கொண்டது. புருண்டியின் தேசிய விளையாட்டு கால்பந்து. புருண்டியில் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன – பிரெஞ்சு மற்றும் கிருண்டி. இங்கு இணையதளம் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. 2014 ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 144,550 இணைய பயனர்கள் மட்டுமே இருந்தனர். இங்கு ஏழு விமான நிலையங்கள் உள்ளது. 12322 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் சேவையும் உள்ளது.
புருண்டியின் அதிகாரப்பூர்வ நாணயமான புருண்டி பிராங்க் முதன்முதலில் 1963 இல் வெளியிடப்பட்டது. புருண்டியும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ளது. இது நிலத்தால் சூழப்பட்ட நாடு. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 848 மிமீ மழை பெய்கிறது. ஜூலையில் வறண்ட காலநிலையையும், ஏப்ரலில் மிகவும் ஈரமான காலநிலையையும் கொண்டுள்ளது. புருண்டியில் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் 200,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புருண்டி 27,834 சதுர கிலோமீட்டர்கள் கொண்டது. நிலப்பரப்பின் அடிப்படையில் இது உலகின் 142 வது பெரிய நாடாகும். 2020ம் ஆண்டு நிலவரப்படி புருண்டியின் மக்கள் தொகை 11,865,821 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவாக பார்க்க