August 18, 2022
அறிந்திராத உண்மைகள்

எல்லா வளங்களும் இருந்தும் ஏழை நாடாக இருக்கும் காங்கோ நாடு? ஏன் தெரியுமா?

காங்கோ நாட்டைப் பற்றிய உங்களில் பலரும் அறியாத ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம். காங்கோ மக்களாட்சிக் குடியரசு மத்திய ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு. பரப்பளவில் ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நாடு காங்கோ. உலகிலுள்ள பதினோராவது பெரிய நாடு. இந்த நாட்டின் மக்கள்தொகை 2022 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 108,407,721.

இதன் வடமேற்கில் காங்கோ குடியரசு, வடக்கே மத்திய ஆப்பிரிக்க குடியரசு, வடகிழக்கில் தெற்கு சூடான், கிழக்கில் உகாண்டா, ருவாண்டா மற்றும் புருண்டி மற்றும் தான்சானியா ஆகியவை எல்லைகளாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம், ஆப்பிரிக்க ஒன்றியம், கிழக்கு ஆப்பிரிக்க சமூகம், COMESA, தென்னாப்பிரிக்க அபிவிருத்தி சமூகம் மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது காங்கோ.

காங்கோவின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் கின்ஷாசா. 1971 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை இந்த நாட்டின் பெயர் சயீர் என இருந்தது. 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க மக்கள் இங்கு வசிக்கத் தொடங்கி உள்ளனர். இங்குள்ள ஆட்சிமொழி பிரெஞ்சு. லிங்காலா, கொங்கோ, கிட்டூபா, சுவாஹிலி, த்ஷிலூபா ஆகிய பிராந்திய மொழிகளும் இங்கு பேசப்படுகிறது. காங்கோ 2,345,409 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.

இங்குள்ள பணம் காங்கோலிஸ் பிராங்க் என அழைக்கப்படுகிறது. உலகில் இப்பொழுது இருக்கும் வெப்பமண்டல மழைக்காடுகளில் 12.5% காங்கோவில் உள்ளது. 1960 இல் காங்கோ இறுதியாக பெல்ஜியத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.

காங்கோவில் உள்ள செம்லிகி ஆற்றின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹார்பூன் குறிப்புகள் 90,000 ஆண்டுகளுக்கும் பழமையானது. இந்த குறிப்புகளில் கல் அல்லது மரத்தைத் தவிர வேறு பொருட்களைப் பயன்படுத்தி நவீன மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட சில ஆரம்பகால கருவிகள் செய்யப்பட்டுள்ளது.

4,700 கிலோமீட்டர் நீளம் கொண்ட காங்கோ வழியாக ஓடும் காங்கோ நதி, நைல் நதிக்கு அடுத்து ஆப்பிரிக்காவின் இரண்டாவது நீளமான நதி. இது உலகின் மிக ஆழமான நதியும் கூட.

உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடு காங்கோ மழைக்காடு. இது காங்கோவில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. காங்கோ மழைக்காடு கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா மற்றும் காபோன் ஆகிய ஆறு நாடுகளில் பரவியுள்ளது.

காங்கோவில் பிக்மி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் குள்ள மனிதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக இவர்கள் 5 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள். சராசரியாக 150 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர்கள். பிக்மி என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்துள்ளது. இதற்கு குள்ள மீன் என அர்த்தம்.

1904ஆம் ஆண்டில் பிக்மி இனத்தை சேர்ந்த ஓட்டா பெங்கா(Ota Benga) என்பவர் காங்கோவில் இருந்து கடத்தி செல்லப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் குரங்குகளின் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டார். அவரை இப்படி மோசமாக நடத்தியதற்காக நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா இறுதியாக மன்னிப்புக் கேட்டது.

காங்கோவில் 200க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க இனக்குழுக்கள் உள்ளன. மோங்கோ, லூபா, கொங்கோ மற்றும் மங்பேடு-அசாண்டே ஆகிய நான்கு பெரிய பழங்குடியினர் பெரும்பான்மையானவர்கள். இவர்கள் மக்கள் தொகையில் சுமார் 45% உள்ளனர்.

காங்கோ அழிந்து வரும் ஒகாபி(okapi) என்னும் விலங்கின் தாயகமாகும். வன ஒட்டகச்சிவிங்கி என்று அழைக்கப்படும் ஒகாபி மான் மற்றும் வரிக்குதிரை சேர்ந்த கலவை போல் தெரிகிறது. ஓகாபி காங்கோவில் உள்ள இடூரி மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டது. இந்த காடுகளில் மட்டுமே இதை நாம் காண முடியும். இந்த இனம் ஏறத்தாள அழிந்து வரக்கூடிய நிலையில் இருக்கிறது.

இங்குள்ள மவுண்ட் நைராகோங்கோ(Nyiragongo) உலகின் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்று. இங்குள்ள மக்கள் இந்த எரிமலையை ஜெனரல் நைராகோங்கோ என அழைக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டில் எரிமலையிலிருந்து வெளிவந்த எரிமலைக்குழம்பு அருகிலுள்ள நகரமான கோமாவின் ஒரு பகுதியை அழித்தது.

கோபால்ட், தாமிரம், நியோபியம், டான்டலம், பெட்ரோலியம், தொழில்துறை மற்றும் ரத்தின வைரங்கள், தங்கம், வெள்ளி, துத்தநாகம், மாங்கனீசு, தகரம், யுரேனியம், நிலக்கரி, நீர்மின்சாரம் மற்றும் மரம் உள்ளிட்ட பரந்த இயற்கை வளங்களைக் கொண்ட உலகின் பணக்கார நாடுகளில் காங்கோவும் ஒன்று. ஆனால் பல அரசியல் காரணங்களால் இன்றளவும் மிக ஏழ்மையான நாடாக இருக்கிறது.

காங்கோவின் தலைநகரான கின்ஷாசாவில் 11,587,000 மக்கள் வசிக்கிறார்கள். கூடவே உலகின் மிகப்பெரிய பிரெஞ்சு மொழி பேசும் நகரம் இது.

Related posts

Leave a Comment