அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய எரிமலை வெடிப்பு உருவாகிறது. அது அதிக அளவில் எரிமலை குழம்பை வெளியே தள்ளுகிறது. தன்னால் முடிந்த மட்டும் நெருப்பை கக்கும் குழம்பை வெளியே தள்ளிய பிறகு சோர்ந்து அடங்கி போகிறது. எரிமலை வெளியே தள்ளிய குழம்பு சுண்ணாம்பு படுக்கைகள் வழியாக பாய்ந்து ஒரு பெரிய எரிமலை பீடபூமியை உருவாக்கியது.
அது தொடர்ந்து குளிர்ச்சியடைய தொடங்குகிறது. குளிர குளிர சுருங்கி சுருங்கி நீங்கள் பார்ப்பது போன்ற அழகான பலகோணங்களில் உள்ள தூண்கள் உருவாகிறது. சுமார் 40,000 பலகோணங்களில் உள்ள தூண்கள் இப்படி இங்கு உருவாகியுள்ளன. இதுதான் அழகான அற்புதமான மர்மமான ஜெயண்ட்ஸ் காஸ்வே(The Giant’s Causeway). இது வட அயர்லாந்தின் வடக்கு கடற்கரையில் உள்ள கவுண்டி ஆன்ட்ரிமில் அமைந்துள்ளது.
1986 இல் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும் 1987 இல் வடக்கு அயர்லாந்தின் சுற்றுச்சூழல் துறையால் தேசிய இயற்கை ரிசர்வ் ஏரியாவாகவும் அறிவிக்கப்பட்டது. தூண்களின் உச்சியில் இருந்து படிக்கட்டுகள் போல உருவாகி கடைசியில் கடலுக்கு அடியில் செல்கிறது. நான்கு, ஐந்து, ஏழு, எட்டு இப்படி பல பக்கங்களுடன் சில தூண்கள் அறுகோண வடிவத்தில் உள்ளன.
மிக உயரமானவை சுமார் 39 அடி உயரம் வரை இருக்கிறது. இது வடக்கு அயர்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. 2019 ம் ஆண்டில் சுமார் 998,000 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். ஜயண்ட்ஸ் காஸ்வேயைச் சுற்றியுள்ள பாறைகள் மற்றும் கல் அமைப்புகள் பலவகையான பறவைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது. கர்மோராண்ட்ஸ், ரெட் ஷாங்க்ஸ், ஃபுல்மர்கள் மற்றும் ஈடர்ஸ் போன்ற பறவைகள் பாறைகளில் கூடு கட்டுகின்றன. மேலும் கடற்கரையின் ஆழமற்ற நீரில் வாழ்கின்றன.
ஜெயண்ட்ஸ் காஸ்வே 1692 ம் ஆண்டில் ஒரு பிஷப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அயர்லாந்து தீவை கைப்பற்றிய பிறகு ஜயண்ட்ஸ் காஸ்வே பிரிட்டிஷ் வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டில் முதலில் குறிப்பிடப்பட்டது. ஆனால் பிஷப் டெர்ரி 1692 ம் ஆண்டில் இந்த இயற்கை நிகழ்வை கண்டுபிடித்ததாக அறிவித்தார். ஜயண்ட்ஸ் காஸ்வேயை வடிவமைத்தது மக்களா அல்லது இயற்கையா என்று பல ஆண்டுகளாக அந்த நேரத்தில் விவாதிக்கப்பட்டது.