November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

தொட்டால் மரணம்தான் அதிக விஷம் கொண்ட பறவை

ஹூடட் பிட்டோஹுய் (hooded pitohui) இந்த பறவையின் பெயர். இது நியூ கினியாவில் காணப்படும் பிடோஹுய் இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனம். உலகில் உள்ள விஷம் கொண்ட அரிய பறவை இனங்களில் இந்த பறவையும் ஒன்று. இந்தப் பறவையின் தோல், இறகுகள் மற்றும் பிற திசுக்களில் பலவிதமான பேட்ராசோடாக்சின் நச்சு கலவைகள் உள்ளன. இந்த பறவையின் உடலில் இருக்கும் நச்சுதன்மை காரணமாக மலைப்பகுதிகளில் வேட்டையாடி சாப்பிடக்கூடிய வேட்டைக்காரர்கள் இந்த பறவைகளை தவிர்த்து விடுவார்கள்.

இந்த பறவை கடல் மட்டத்திலிருந்து 6,600 அடி உயரம் வரையிலான காடுகளில் காணப்படுகிறது. இந்த பறவையை 1850 இல் பிரெஞ்சு பறவையியல் வல்லுனரான சார்லஸ் லூசியன் போனபார்ட் ஆராய்ந்து அதை விவரமாக பதிந்துள்ளார். இந்த பறவைகள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. மிகவும் இரகசியமான இடங்களில் மட்டுமே காடுகளில் வசிக்கக் கூடியது. இதை அவ்வளவு எளிதாக மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது.

இந்த பறவையை நீங்கள் தெரியாமல் தொட்டால் உங்கள் உடல் முழுவதுமாக அரிப்பு ஏற்படும். உடல் எரிவது போன்ற உணர்வு இருக்கும். கண்களில் தொடர்ந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும். உடலின் பல பகுதிகள் உணர்வில்லாமல் இருக்கும். இதற்கு காரணம் இந்த பறவையிடம் இருக்கும் பேட்ராச்சோடாக்சின் எனப்படும் நியூரோடாக்சின் விஷம். இந்த விஷம் அதிகளவு உங்களுடைய உடலில் கலந்தால் பக்கவாதம் மற்றும் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த பறவையை சாப்பிடவும் முடியாது. தெரியாமல் இந்த பறவையை சாப்பிட்டால் கூட இந்த பறவையின் தோல் மற்றும் இறகுகளில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை காரணமாக குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படும். மிகவும் கடுமையான விஷம் உடலில் கலந்தால் மரணம் கூட ஏற்படும். இந்த பறவையின் உடலில் விஷம் அது சாப்பிடக்கூடிய உணவிலிருந்து தயாராகிறது. இந்தப் பறவை நச்சுத்தன்மையுள்ள கொரோசின் வண்டுகளை அதிகம் சாப்பிடுமாம்.

அது உண்ணும் சிறிய வண்டுகளில் இருந்து விஷத்தைப் பெறுவதாக கருதப்படுகிறது. வண்டுகள் BTX எனப்படும் ஒரு நச்சுப்பொருளை உற்பத்தி செய்கின்றன என்று நம்பப்படுகிறது. நச்சு மிகுந்த வண்டுகளை இந்த பறவை சாப்பிட்ட பிறகு வண்டுகளின் விஷம் இந்த பறவையின் உடலில் பரவுகிறது. அதுபோல நச்சு மிகுந்த தவளை இனங்களையும் சாப்பிடுமாம். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த பறவை மிகவும் நச்சு மிகுந்த பறவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டு நியூ கினியாவில் பறவைகளை பிடித்து கொண்டிருந்த ஜாக் டம்பேச்சரால் இந்த பறவை கண்டுபிடிக்கப்பட்டது. 1980 களின் பிற்பகுதியில் ஸ்மித்சோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர்கள் இந்த பறவையை கண்டபோது, அவர்கள் முதன்முதலில் இந்தப் பறவைக்கு விஷம் இருப்பதை தெரிந்து கொண்டனர். ஜேக் டம்பேச்சர் அந்த நேரத்தில் பட்டதாரி மாணவராக இருந்தார்.

இவர் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அதற்காக பறவைகளைப் பிடிப்பதற்காக வலைகளை அமைத்திருந்தார். அவர்கள் விரித்திருந்த வலையில் பல பறவைகள் மாட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையாக இவர் பிடித்துக் கொண்டு வரும் பொழுது ஒரு பறவையை பிடித்த பொழுது அந்த பறவையின் ஒரு பகுதி இவருடைய கையை லேசாக கிழித்தது.

அது அவருடைய விரலில் மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர் அவருடைய விரலை வாயில் வைத்தார். அப்பொழுது அவருடைய வாய் அதிகளவு வலியோடு எரிச்சலோடு மரத்துப்போனது. அவரும் அவரது குழுவினரும் உள்ளூர் மக்களிடம் இந்த பறவைகளைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் இந்த ஹூடட் பிட்டோஹுய் பறவையை குப்பைப் பறவை என்று சொன்னார்கள். அப்படி என்றால் இதை சாப்பிடுவதோ தொடவோ கூடாது என அர்த்தமாம். இதன்பிறகே இந்தப் பறவைக்கு விஷம் இருப்பதும் தெரியவந்தது. இந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்தார்கள்.

Related posts

Leave a Comment