May 30, 2020
தகவல்

கமகமக்கும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பிரியாணி இந்தியாவில் காலடி வைத்த கதை தெரியுமா ?

உணவின் சுவையை சொல்லவேண்டுமானால் நம்ம ஊரை தாண்டி வேறு எதுவுமில்லை என சொல்வார்கள். அப்படி விதவிதமாக கமகமக்க நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பல விதமான உணவு வகைகளை செய்து அசத்துவார்கள் நம்மவர்கள்.

நம்முடைய வீடுகளில் மட்டுமல்ல பல ஹோட்டல்களில் கூட உணவு சுவைக்கு பலரும் அடிமையாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த இடம் என்றால் இந்த ஹோட்டல் தான் இவர்கள் கொடுக்கும் சுவையை வேறு யாரும் கொடுக்க முடியாது என பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

அந்த இடங்களுக்கு நாமும் போய் அங்கு உணவு எப்படி இருக்கும் என சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் இப்போது பலருக்கும் பிடித்த ஒரு உணவாக மாறி வருவது பிரியாணி. கேட்கும் போது நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த பிரியாணி, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு அற்புதமான உணவு.

பிடித்த பிரியாணிக்காக பல கிலோமீட்டர்கள் சென்று பிரியாணி சாப்பிட்டு வருபவர்களும் பல பேர் இருக்கிறார்கள். இப்படி எல்லோரையும் டேஸ்டில் கட்டிப்போடும் இந்த பிரியாணி பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த அந்நிய உணவான பிரியாணி எப்படி நம்முடைய இந்தியாவுக்குள் வந்தது தெரியுமா உங்களுக்கு. இந்த பிரியாணி பிறந்த இடம் பெர்சியா. இப்போதைய ஈரான் என சொல்லப்படுகிறது. 14ம் மற்றும் 15ம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மனிதர்களுக்காக ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட உணவு தான் பிரியாணி எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் இப்பொழுதும் இந்த பிரியாணி பிறந்த இடம் பெர்சியா இல்லை அரேபியா என ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. பிரியாணி என்னும் சொல்லுக்கு பார்சி மொழியில் வறுக்கப்பட்ட உணவு என்று பொருள்.

பிர்யான் என்னும் பாரசீக சொல்லில் இருந்து பிரியாணி பிறந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பிரியாணி அரிசியை கழுவாமல் நெய்யில் வறுத்து எடுப்பார்கள். மசாலா கலவைகளை சரியாக கலந்து இறைச்சியை அரிசிக்கு இடையில் வைத்து இது வெந்ததும் நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இதுதான் தம் பிரியாணி என்று சொல்கிறார்கள்.

தன்னுடைய ஆசை மனைவி மும்தாஜின் அன்புக் கட்டளையின் பெயரில் போர் வீரர்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதற்காக சமைக்கப்பட்ட உணவு தான் பிரியாணி எனவும் சொல்லப்படுகிறது.

லக்னோவுக்கும் பிரியாணிக்கும் எப்பொழுதும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரியாணி வகைகளில் லக்னோ பிரியாணிதான் முதலாவதாக உருவானது எனவும் நம்பப்படுகிறது.

லக்னோ மற்றும் ஒருசில உத்தரப்பிரதேச பகுதிகளில் பேசப்படக்கூடிய அவதி மொழியிலிருந்து அவாதி பிரியாணி என இந்த பிரியாணிக்கு பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். அங்கிருந்து அவாதி பிரியாணி என இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது.

அதன் பிறகு டெல்லியில் இருந்து முகல் பிரியாணி எனவும் பரவியது. இந்த பிரியாணியை தவிர லக்னோ கபாப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். அதன்பிறகு 1856 ல் கல்கத்தாவை நவாப் வாஜித் அலி ஷா மூலமாக கல்கத்தா பிரியாணி என உருவாகி பரவியது.

தென்னிந்தியாவில் மைசூர் திப்பு சுல்தானின் கோட்டையில் பல சைவ சமையல்காரர்கள் மூலமாக வெறும் காய்கறிகளை மட்டும் வைத்து தாகிரி பிரியாணி சமைத்து பிரபலமாக்கினார்கள். அதே காலகட்டத்தில் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்கள் மூலமாக ஹைதராபாத் பிரியாணி எனவும், ஆற்காடு நவாப்கள் மூலமாக வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் ஆற்காடு பிரியாணி எனவும் பரவ ஆரம்பித்தது.

கேரளாவில் கோழிக்கோடு வழியாக படையெடுத்து வந்த நவாப்கள் அந்த பகுதியில் சில காலம் ஆண்டார்கள். அங்கிருந்து தலச்சேரி பிரியாணி எனவும் சுற்றிலும் பரப்பினார்கள்.

அதுமட்டுமல்லாமல் கடலோர கர்நாடகாவில் பத்களி பிரியாணி, மகாராஷ்டிராவில் பம்பாய் பிரியாணி, ஜம்முவில் காஷ்மீர் பிரியாணி, குஜராத்தில் மிமோனி பிரியாணி, தமிழ்நாட்டில் திண்டுக்கல் பிரியாணி என பல வெரைட்டி பிரியாணிகள் இந்தியா முழுவதுமாக பரவியது.

மும்பையில் பாம்பே பிரியாணி மிகவும் பிரபலமாய் இருக்கிறது. பாம்பே பிரியாணி மும்பையில் உள்ள ஒரு பகுதி இஸ்லாமிய சமூக மக்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பிரியாணியில் இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படுகிறது. இது ஒருவித வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு பாம்பே பிரியாணி மும்பையின் தனி சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

பட்கல் பிரியாணி கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்யும் முறை கடலோர கர்நாடகா மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. இது பம்பாய் பிரியாணியை போல தயாரிக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் ஸ்பெஷலாக வெங்காயம் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இது அதிக சுவைக்கு வழிவகுக்கிறது.

சங்கரன்கோவில் பிரியாணி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் செய்யப்படக்கூடிய ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கக்கூடிய கன்னி என்ற வகையை சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனால் இதன் சுவையும் மிக அதிகம்.

தலப்பாக்கட்டு பிரியாணி உலகம் முழுவதும் பிரபலம். திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியை ஸ்பெஷலாக சீரக சம்பா அரிசி கொண்டு செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையை உறிஞ்சிக் கொள்வதால் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. அதனுடன் மிகவும் சுவையான கன்னிவாடி ஆட்டிறைச்சி சேர்ப்பதால் மிக அதிக ருசியை கொடுக்கிறது.

இது மட்டுமல்லாமல் நம்முடைய நாடு முழுவதும் இன்னும் ஏராளமான வகை பிரியாணிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு வீடுகளிலும் செய்யக்கூடிய பிரியாணி ஒவ்வொரு அதீத சுவையை கொண்டிருக்கிறது.

இன்னும் வெளிவராமல் ஏராளமான அதிக சுவை கொண்ட சுவைத்தால் நாவில் எச்சில் ஊற வைக்கும் கமகமக்கும் பிரியாணி வகைகள் இன்னும் உலகிற்கு வெளிவராமலே இருக்கின்றன. இனி நீங்கள் பிரியாணி சாப்பிடும் பொழுது இந்த வரலாற்றையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்.

Related posts

Leave a Comment