இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த தீவுக்கூட்டம் பணத்தை அள்ளியெடுத்து செலவு செய்ய விரும்பும் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டது. மாலத்தீவில் ஆடம்பரங்களில் ஒன்று கடல் விமான சவாரி. மாலத்தீவில் மிகக் குறுகிய கடல் விமானம் பயணம் செய்வது கூட விலை உயர்ந்த விஷயம். மாலத்தீவில் சுற்றுலா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன ஒரு தீவு நாடு மாலத்தீவு. கடல் உட்பட 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்குள்ள மொத்த தீவுகளின் நிலப்பரப்பு 298 சதுர கிலோமீட்டர்கள். மாலத்தீவில் மொத்தம் 26 பவளப்பாறைகள் மற்றும் 1190 தீவுகள் உள்ளன.
2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 579,330 பேர். ஆசியாவில் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு மாலத்தீவுகள்.
மாலத்தீவுகளின் தலைநகரம் மாலி. இங்குள்ள பெரிய நகரமும் இதுவே.
இங்குள்ள மக்கள் பேசும் மொழி திவேகி.
இங்கு உள்ள நாணயம் ரூப்பியா. அமெரிக்க டாலரும் இங்கு செல்லுபடியாகும். கௌரி ஷெல்ஸ்(Cowry shells) பண்டைய நாணயமாக பயன்படுத்தப்பட்டது.
உலகின் மிகவும் தட்டையான நாடு என மாலத்தீவு அழைக்கப்படுகிறது. இந்த அழகான தீவு நாடு சராசரியாக கடல்மட்டத்திலிருந்து 1.8 மீட்டர் உயரத்தில் உள்ளது. மாலத்தீவுகளின் மிக உயரமான இடமான வில்லிங்கிலி தீவு கடல் மட்டத்திலிருந்து 2.3 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மாலத்தீவில் உள்ள 1200 தீவுகள் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக இரண்டு மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் கடல் மட்டம் உயர்வு, கடலரிப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த நாடு மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. தற்போதுள்ள விகிதத்தில் மாலத்தீவு மூழ்குவது தொடர்ந்தால் 2030 க்குள் முற்றிலும் நீரில் மூழ்கிவிடும் மாலத்தீவு. இந்த பாதிப்புகளை குறைக்க மாலத்தீவு கடுமையான சுற்றுச்சூழல் சட்டங்களை இயற்றியுள்ளது.
இங்கு நவம்பர் முதல் மார்ச் வரை வடகிழக்கு குளிர்கால பருவ மழை பெய்கிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென் மேற்கு பருவ மழை பெய்கிறது.
மாலத்தீவில் உள்ள கடற்கரைகள் அதிக வெள்ளை மணலோடு காணப்படுகிறது. மற்ற கடற்கரை மணல்கள் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் மாலத்தீவில் உள்ள பல கடற்கரை மணல்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இந்த பவள மணல் மிகவும் அரிதானது. உலகம் முழுவதும் சுமார் 5 சதவிகித கடற்கரைகளில் மட்டுமே இந்த பவளப் மணல் காணப்படுகிறது.
மாலத்தீவுகளில் உள்ள 1200 தீவுகளில் சுமார் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள் 110 தீவுகள் சுற்றுலாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பிற தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.
உலகின் மிகப்பெரிய திமிங்கல சுறா இங்குள்ளது. மேலும் மாலத்தீவு புகழ்பெற்ற டைவிங் செய்யும் இடமும் கூட. இப்பகுதியில் ராட்சத திமிங்கல சுறாக்களை டைவிங் செய்யும் பொழுது உங்களால் பார்க்க முடியும். குறிப்பாக சன் தீவுக்கு அருகிலுள்ள பாறைகளைச் சுற்றி அதிகம் ராட்சத திமிங்கல சுறாக்கள் உள்ளது. ரங்காலி தீவு மற்றும் ஹனிஃபாரு பேவில் பிற சுறா வகைகளையும் நீங்கள் பார்க்கலாம்.
பூமியின் பெரும்பாலான கடல் ஆமை இனங்களின் தாயகம் மாலத்தீவுகள். உலகில் உள்ள ஏழு கடல் ஆமை இனங்களில் ஐந்து கடல் ஆமை இனங்களின் தாயகமாக மாலத்தீவுகள் உள்ளது. இங்குள்ள பிரபலமான டைவ் தளங்களுக்குச் செல்லும்போது லாகர்ஹெட்ஸ், லெதர்பேக்ஸ், ஆலிவ் ரிட்லி ஆமைகள், பச்சை ஆமைகள் மற்றும் ஹாக்ஸ்பில் ஆமைகளை கண்டு ரசிக்கலாம்.
பாரம்பரியமாக மாலத்தீவு படகுகள் ஓட்டுபவர்கள் திசைகாட்டி அல்லது ஜிபிஎஸ் பயன்படுத்துவதில்லை தெரியுமா? நீங்கள் மாலத்தீவுக்குச் சென்றால் தோனிகள் அல்லது பாரம்பரிய மாலத்தீவு படகுகளில் சவாரி செய்யலாம். அனுபவம் வாய்ந்த தோனி கேப்டன்கள் மற்றும் குழுவினர் பல்வேறு பவளப்பாறைகள் மற்றும் தீவுகளுக்கு செல்ல GPS அல்லது திசைகாட்டிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் நீரின் நகர்வைக் கவனித்து சரியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கிறார்கள்.
தென்னை மரம் மாலத்தீவின் தேசிய மரமாகும். அதை நீங்கள் அவர்களின் கொடியில் பார்க்கலாம். இந்த மரங்கள் குறைந்தது நூறு ஆண்டுகள் நீடிக்கும். 30 மீட்டர் உயரம் வரை வளரும். எல்லா தீவுகளிலும் தென்னை மரம் காணப்படும். மாலத்தீவுகளின் பூர்வீக குடிமக்கள் தோனிகளை கடற்கரையில் கொண்ட வந்து கட்டுவதற்கு தென்னை மரத்தை பயன்படுத்தியுள்ளனர்.
மாலத்தீவு கடுமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. மாலத்தீவின் அரசியலமைப்பின் படி முஸ்லிம்கள் மட்டுமே நாட்டின் குடிமக்கள் என்று அழைக்கப்படுவார்கள். இஸ்லாம் தவிர வேறு எந்த மத நம்பிக்கையும் அனுமதிக்கப்படாது.
மாலத்தீவுகள் உலகின் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குடும்பப் பயணங்கள், தேனிலவு சுற்றுப்பயணங்கள், தம்பதியர் உல்லாசப் பயணங்கள் மற்றும் ஓய்வு விடுமுறைகள் உட்பட அனைத்து வகையான விடுமுறைகளுக்கும் பூமியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக மாலத்தீவு உள்ளது.
மாலத்தீவு தோனி மாலத்தீவின் பாரம்பரிய படகுகளாகும். இவை தற்போது கடலில் பயணம் செய்வதற்கு மட்டுமல்ல மீன்பிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகள் 11 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் மாலுமிக் கப்பலாகப் பயன்படுத்தப்பட்ட பண்டைய அரேபிய பாய்மரக் கப்பலின் சாயலில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் படி மாலத்தீவுகளில் அதிக விவாகரத்து விகிதம் உள்ளது. இது அமெரிக்காவை விட வருடத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. சராசரியாக மாலத்தீவில் உள்ள பெண் 30 வயதை எட்டுவதற்கு முன்பு மூன்று முறை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன.
நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங், கீழே கண்ணாடி பதித்த கண்ணாடி படகு சவாரி மூலமாக ஆண்டு முழுவதும் திமிங்கல சுறாக்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழலாம்.
உலகின் முதல் நீருக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் மாலத்தீவில் நடைபெற்றது. 17 அக்டோபர் 2009 அன்று மாலத்தீவு ஜனாதிபதி முகமது நஷீத் தனது அமைச்சரவை அமைச்சர்களோடு கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தினார். கடல் மட்டம் உயர்வதால் தீவு தேசத்தில் புவி வெப்பமடைதல் பிரச்சினை குறித்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான இந்த கூட்டம் கிலிஃபுஷியில் நடைபெற்றது.