November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

மாயாஜால சக்திகள் கொண்டதா அமேசான் பிங்க் ரிவர் டால்பின்

பிங்க் நதி டால்பின்(pink river dolphin) என்றும் அழைக்கப்படும் அமேசான் நதி டால்பின் நன்னீரில் மட்டுமே வாழ்கிறது. இது பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், கயானா, பெரு மற்றும் வெனிசுலாவில் உள்ள அமேசான் மற்றும் ஓரினோகோ நதிப் படுகைகள் முழுவதும் காணப்படுகிறது. இது பூமியில் உள்ள சில பழமையான உயிரினங்களாக சுறா மற்றும் கடல் ஆமைகளின் வரிசையில் இருக்கிறது. ஆண் டால்பின் 185 கிலோகிராம் எடை வரை இருக்கும். 8.2 அடி நீளம் இருக்கும்.

அமேசான் பிங்க் நதி டால்பின் அதன் நிறத்தை மாற்றும் குணம் கொண்டது. இந்த டால்பின்கள் உண்மையில் சாம்பல் நிறத்தில் பிறக்கின்றன. வயதாகும்போது மெதுவாக இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.

அமேசான் இளஞ்சிவப்பு நதி டால்பின் நன்னீர் டால்பின் இனங்களில் மிகப்பெரிய உடல்களையும் மூளையையும் கொண்டுள்ளது. ஐந்து நன்னீர் இனங்களில் அமேசான் பிங்க் நதி டால்பின் மிகப்பெரியது கூடவே புத்திசாலித்தனமானது. 30 வயது வரை வாழும். மனிதர்களை விட 40 சதவீதம் அதிக மூளை திறன் கொண்ட இவைகள் வழக்கத்திற்கு மாறாக பெரிய மூளையையும் கொண்டுள்ளன.

அமேசான் இளஞ்சிவப்பு நதி டால்பின் பல தென் அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறுகிறது. மக்கள் இங்கு தனியாக நீந்தச் சென்றால் டால்பின்கள் மக்களை நீருக்கடியில் உள்ள ஒரு மாயாஜால நகரத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால் தண்ணீருக்கு அருகில் செல்லவோ அல்லது தனியாக நீர்நிலைகளுக்குள் நுழையவோ உள்ளூர் மக்கள் பயப்படுகின்றனர்.

இங்குள்ள டால்பின்களுக்கு தீங்கு விளைவிப்பது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. மேலும் அவற்றை சாப்பிடுவது மோசமான துரதிஷ்டத்தை ஏற்படுத்தும் என இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். பெருவியன் அமேசானில் இளஞ்சிவப்பு நதி டால்பின் ஒரு மாயாஜால உயிரினமாக கருதப்படுவதால் இந்த இனங்கள் பாதுகாப்பாக எண்ணிக்கையை அதிகரிக்க உதவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருந்தாலும் கடந்த 75 ஆண்டுகளில் அதன் மொத்த எண்ணிக்கை 50% அல்லது அதற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக சான்றுகள் கூறுவதால் இவை அழிந்துவரும் இனங்கள் என வகைப்படுத்துகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, பிற மக்கள் இவைகளை பிடிப்பது போன்ற காரணங்கள். இந்த டால்பின்கள் மாயாஜால சக்திகள் கொண்டவை என்ற உள்ளூர் நம்பிக்கையின் காரணமாக நீண்ட காலமாக மதிக்கப்பட்டு பாதிப்பில்லாமல் இருந்தாலும் இந்த நம்பிக்கைகள் இப்பொழுது மாறி வருகின்றன.

மீனவர்கள் போட்டியாகக் கருதப்படுவதால் அவற்றைக் கொல்வதும். கெளுத்தி மீன்களுக்கு தூண்டில் பயன்படுத்துவதும் அதில் தற்செயலாக டால்பின்கள் அடிக்கடி வலையில் சிக்குவதும் இதன் அழிவுக்கு காரணமாக அமைகிறது.

சிலர் இளஞ்சிவப்பு நதி டால்பின்களால் மனித வடிவத்தை எடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். இளஞ்சிவப்பு நதி டால்பின்கள் இரவில் அழகான வெள்ளைத் தொப்பி அணிந்த ஆண்களாக மாறுவேடமிட்டு மழைக்காடுகளில் உலா வருகின்றன எனவும் அந்த நேரத்தில் அப்பாவி உள்ளூர் பெண்களை மயக்கி கருவுறச் செய்யும் என்று ஒரு அமேசானிய புராணக்கதை உள்ளது.

அமேசான் நதி டால்பின்கள் 50 வகையான மீன்களையும், ஆற்றின் அடிப்பகுதியில் காணப்படும் இறால், நண்டு மற்றும் சிறிய ஆமைகளையும் கூட சாப்பிடுகின்றன. அவை மேல் நோக்கி நீந்தி கொன்டே அடிக்கடி கீழே பார்க்கின்றன. வேட்டையாடுவதற்கு இருப்பிடத்தை தெரிந்து கொள்ள எதிரொலியை பயன்படுத்துகின்றன. அதன் தலையை 180 டிகிரிக்கு திருப்ப முடியும். இதனால் சுற்றிலும் எல்லா இடங்களையும் அதனால் பார்த்து கொண்டே நீந்த முடியும்.

அமேசான் நதி டால்பின்கள் தினமும் நீண்ட தூரம் நீந்துகின்றன. அவை ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் வரை நீந்துகின்றன. இருப்பினும் அவை எப்போதும் உணவைத் தேடுவதால் மெதுவாக நகரும்.

Related posts

Leave a Comment