November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துவரும் வான்கோழி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

அசைவ உணவு உண்ணும் பலருக்கும் தெரிந்திருக்கும் வான்கோழி. நல்ல அற்புதமான ஒரு சுவையை கொடுக்கக்கூடியது வான்கோழி இறைச்சி. வான்கோழியை வைத்து செய்யக்கூடிய பிரியாணி மிகவும் சுவையான ஒரு பிரியாணி. நல்ல ருசியாக இருக்க கூடிய இந்த வான்கோழியை பற்றிய ஒரு சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

வான்கோழி, ஃபாசியானிடே(Phasianidae) அல்லது மெலியாகிரிடிடே(Meleagrididae) குடும்பத்தை சேர்ந்தது. வான்கோழி அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. வான்கோழிகள் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவில் உருவாகியது என சொல்லப்படுகிறது. சராசரியாக வளர்ந்த ஒரு வான்கோழி ஏழிலிருந்து பத்து கிலோ எடை இருக்கும். ஒரு வான்கோழி 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.

வான் கோழிகளால் பறக்க முடியாது என சொல்வார்கள். ஆனால் காட்டு வான்கோழிகள் குறுகிய தூரத்திற்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். வீட்டில் வளர்க்கக் கூடிய வான்கோழிகள் பறக்காது. காரணம் இது காட்டு வான்கோழிகளை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கும்.

வான்கோழி முட்டையிடத் தொடங்கும் பொழுது சுமார் இரண்டு வாரங்களுக்குள் 10 லிருந்து 12 முட்டைகளை இடும். 28 நாட்கள் இந்த முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

வான்கோழிகள் பெரும்பாலான நேரத்தை தரையில் செலவிடுகிறது. ஆனால் தூங்கும் போது அது மரத்தில் ஏறி அமர்ந்து தூங்குகிறது.

வான்கோழிகளுக்கு மனிதர்களை விட மூன்று மடங்கு அதிக கண் பார்வை உள்ளது. அவைகளுக்கு நிறத்தையும் பிரித்தறிய முடியும். அதனுடைய கண்பார்வை 270 டிகிரி கோணத்தில் தெரியும்.

வான்கோழிகள் 20க்கும் மேற்பட்ட தனித்துவமான வெவ்வேறு குரல்களை வெளிப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. வான்கோழியின் சத்தம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்குமாம்.

வான்கோழிகள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் அளவு இடத்தை துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும் திறன் கொண்டது. இந்த பரப்பளவில் எந்த இடத்தில் என்ன உணவுகள் கிடைக்கும் என்பது அதற்கு நன்றாக தெரியும்.

வான்கோழியின் தலையில் உள்ள இறக்கைகள் நிறம் மாறும் திறன் கொண்டது. ஆண் வான்கோழி உற்சாகமாக இருக்கும் பொழுது தலை நீல நிறமாக இருக்கும். சண்டைக்கு தயாராகும் பொழுது அது சிவப்பு நிறமாக மாறிவிடும்.

வான்கோழிகளுக்கு 6000 இறகுகள் வரைக்கும் இருக்கும். வான்கோழிகள் ஒரு காலத்தில் அதனுடைய அழகான இறகுகளுக்காக அதிகம் வளர்க்கப்பட்டுள்ளது. 1935ஆம் ஆண்டு வரைக்கும் வான்கோழிகளின் அழகான வண்ண இறகுகள் எடுப்பதற்காக அதிகம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

வான்கோழிகள் கிட்டத்தட்ட இரண்டு முறை அழிந்துபோனது. கலிபோர்னியா வான்கோழி சுமார் 10,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போனது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதிக அளவு வேட்டையாடியதன் காரணமாக இந்த காலகட்டத்தில் இது அழிந்து போயிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்கள் அமெரிக்காவிற்கு வந்தபோது வான்கோழிகள் அதிகம் வேட்டையாடப்பட்டது. இதன் காரணமாக 1813ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கனெக்டிகட்டில் இருந்து இந்த பறவைகள் முற்றிலும் அழிந்து போனது. 1842 இல் வெர்மான்ட்டில் இருந்து அழிந்து போனது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வான்கோழிகள் இங்கிலாந்திலுள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும் பொழுது சிறிய அளவிலான காலணிகள் அதனுடைய கால்களில் பொருத்தப்பட்டிருந்ததாம். இவைகளுடைய கால்களை பாதுகாக்கும் வகையில் இந்த காலணிகளை வான்கோழிகளுக்கு அணிவித்தார்களாம்.

அமெரிக்கர்கள் நன்றி செலுத்தும் திருவிழாவை கொண்டாடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இப்படி நடக்கும் நன்றி செலுத்தும் திருவிழாவில் சுமார் 5 கோடி அளவிற்கு வான்கோழிகள் சாப்பிடப்படுகின்றது. கிறிஸ்மஸ் பண்டிகை அன்று 2 கோடியே 20 லட்சம் வான்கோழிகள் சாப்பிடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை அன்று ஒரு கோடியே 90 லட்சம் வான்கோழிகள் சாப்பிடப்படுகிறது. சராசரி அமெரிக்கர் ஒவ்வொரு ஆண்டும் 48 கிலோ வான்கோழியை சாப்பிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 30 கோடி அளவிற்கு வான்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த பால் கெல்லி என்பவர் வான்கோழியை மிக வேகமாக வெட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஜூன் 3, 2009 ம் ஆண்டில் அவர் 3 நிமிடம் 19.47 வினாடிகளில் ஒரு வான்கோழியை அழகாக வெட்டி முடித்து சாதனை படைத்துள்ளார்.

Related posts

Leave a Comment