January 31, 2023
தகவல்

காகங்கள் பற்றி உங்களில் பலரும் அறிந்திராத சுவாரஸ்ய உண்மைகள்

காகங்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமான பறவைகள். கருவிகளைப் பயன்படுத்தக்கூடியதும் கருவிகளை உருவாக்கக்கூடியதுமான ஒரே விலங்கினம். கைக்கு எட்டாத உணவைஎடுக்க ஒரு குச்சியைப் பயன்படுத்தும் காகத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். காகங்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில் அவை இதற்கு முன்பு கம்பிகளை பற்றி தெரிந்திராத பொழுதும் அதன் அருகில் இருந்த கம்பிகளை வளைத்து பயன்படுத்தியிருக்கிறது.

காகங்கள் அளப்பரிய நினைவாற்றலுடன் மிகவும் புத்திசாலியானது. ஒரு காகம் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டது. ஆபத்து பற்றிய தகவல்களை மற்ற காகங்களுடன் அவைகள் தங்கள் மொழியில் பகிர்ந்து கொள்ளும். கடந்த காலங்களில் ஒரு காகம் கொல்லப்பட்ட பகுதிகளைத் தவிர்ப்பதற்காக காகங்கள் தங்கள் முழு இடம்பெயர்வு முறையை மேற்கொள்கிறது.

அதாவது பிரச்சனைக்குரிய அந்த இடத்திலிருந்து மொத்தமாக வெளியேறுகிறது. இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் காகங்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க நீதிமன்றம் போன்ற செயல்பாட்டில் ஈடுபடுகின்றன. அங்கு அவைகள் இளவயது காகங்கள் உணவை திருடுவது போன்று செய்யும் எந்த குற்றத்தையும் செய்த காகத்தை தண்டிக்கிறது. இது காகங்களிடம் காணப்படும் வித்தியாசமான செயல் என சொல்லப்படுகிறது.

காகங்கள் மிகவும் அறிவார்ந்த பறவைகள். அவைகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் மிகசிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டது. காகம் மனிதர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை மற்ற காகங்களுக்கு கற்றுக் கொடுக்கும். அவைகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் மனிதர்களை மற்ற எல்லா காகங்களுக்கும் தெரிவிக்கிறது. காகங்கள் மனிதர்களின் முகத்தை மறக்காது என்று ஆராய்ச்சி சொல்கிறது.

காகங்கள் கூட்டமாக சேர்ந்தால் தங்கள் எதிரியை கொல்லாமல் ஓயாது. ஒரு காகம் இறந்து போனால் மற்ற காகங்கள் இறந்த காகத்தை சூழ்ந்து கொள்ளும். ஆனால் இறந்த காகத்தை ஒருபோதும் தொடாது. இப்படி செய்வது இறந்த காகத்திற்கு இறுதி சடங்கு செய்து துக்கம் அனுசரிப்பதற்காக மட்டும் அல்ல. காகங்கள் ஒன்று கூடி இறந்த காகம் எப்படி இறந்துபோனது, யார் கொன்றது என்பதை கண்டுபிடிக்கும்.

பின்னர் மொத்தமாக காகங்கள் கும்பல் சேர்ந்து இறந்த காகத்தை கொன்றவைகளை துரத்தியடிக்கும். காகங்களிடம் எதிரி சிக்கினால் அவ்வளவுதான். சங்கு ஊதிவிடும். அதுபோல இறந்த காகத்தின் அருகில் அதற்கு எவ்வளவு பிடித்தமான உணவுகள் அதிகம் இருந்தாலும் அதை சாப்பிட விரும்பாது. இறந்த காகத்தின் அருகில் உள்ள இடங்களையும் தவிர்க்கிறது.

காகங்கள் பொதுவாக இடம்பெயர்வதில்லை. சில காகங்கள் மட்டுமே இடம்பெயர்கின்றன. ஒரு சில நேரங்களில் அதிக குளிர் இருக்கும் பகுதிகளில் இருந்து வெப்பமான பகுதிகளுக்குச் செல்கின்றன.

காகங்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாப்பிடுகின்றன. பாலூட்டிகள், நீர்வாழ்வன, பறப்பவை, ஊர்வன போன்ற சிறிய விலங்குகளை சாப்பிடுகின்றன. மேலும் சிறிய பூச்சிகள், விதைகள், தானியங்கள், கொட்டைகள், பழங்கள், புழுக்கள் மற்றும் பிற பறவைகளையும் கூட உண்ணும். காகங்கள் குப்பைகளை உண்பது மட்டுமல்லாமல் உணவை தற்காலிகமாக மரங்கள், தரையில் மற்றும் மறைவான இடங்களில் சேமித்து வைத்து பிறகு சாப்பிடுகின்றன.

காகங்கள் தங்கள் குஞ்சுகளை குழுவாக சேர்ந்து வளர்க்கும். வயதான காகங்கள் புதிதாகப் பிறந்த குஞ்சுகளை வளர்ப்பதற்கு அவைகளின் பெற்றோருக்கு உதவுகிறது. பெரும்பாலும் அவைகள் பிறந்த இடத்திற்கு அருகில் தங்கி அங்கேயே குஞ்சுகளை வளர்க்கவும் செய்கிறது. 15 முதல் 60 அடி உயரத்தில் மரக்கிளைகளில் கூடு கட்டும். நம்முடைய ஊர்களில் மின்சார தூண்களையும் காகங்கள் விட்டுவைப்பதில்லை. மின்சார தூண்களின் மேல்பகுதியில் கூடுகளை அமைக்கிறது.

இதன் கூடுகள் 1.5 முதல் 2 அடி விட்டம் இருக்கும். பெண் காகம் நான்கிலிருந்து ஐந்து முட்டைகளை இட்டு 18 நாட்கள் அடைகாக்கும். நான்கு வாரங்களில் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறி பறக்க தொடங்கும். இருந்தாலும் காகங்கள் குஞ்சுகளுக்கு 60 நாட்கள் வரை உணவளிக்கிறது. காகங்கள் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 59 வயது வரை வாழ்ந்த காகம் ஒன்றும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

காகங்கள் பல வித்தியாசமான ஓசைகளை எழுப்பும். காகங்களின் 33 வகையான வித்தியாசமான குரல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேலையை வெற்றியாக செய்து முடித்த பிறகு மனிதர்கள் உணரும் சாதனை உணர்வைப் போலவே ஒரு கருவியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு காகங்களும் அதிக நம்பிக்கையுடன் நடந்து கொள்கின்றனவாம். மனிதர்களைப் போலவே காகங்களும் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் மகிழ்ச்சி அடைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஜப்பானில் உள்ள கேரியன் காக்கைகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிகவும் பிடித்த ஒன்று. இந்த அக்ரூட் பருப்புகளை உடைப்பது கடினம். காகங்கள் அவற்றைப் பிளந்து சுவையான பருப்பை சாப்பிட உயரத்திலிருந்து பாறைகளில் போடும். அக்ரூட் பருப்பு உடைந்தபிறகு பருப்பை சாப்பிடும். ஆனால் நகரத்தில் பாறைகள் இல்லை. அதனால் காகங்கள் ஒரு தந்திரத்தை செய்கிறது. போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அருகில் உள்ள சாலையில் செல்லும் கார்களின் சக்கரத்தின் அடியில் அக்ரூட் பருப்புகளை போட்டுவிடுகிறது.

கார்கள் நகரும் பொழுது சக்கரத்தின் அடியில் பட்டு அக்ரூட் பருப்புகள் உடைகிறது. போக்குவரத்து சிக்னல் விளக்குகள் சிவப்பு நிறமாக மாறும்போது கார்கள் நிற்கின்றன. இந்த நேரத்தில் நின்றுகொண்டிருக்கும் கார் டயர்களுக்கு முன்னால் அக்ரூட் பருப்புகளை வைக்கின்றன. கார்கள் அக்ரூட் பருப்புகளை உடைக்கும் வரை காத்திருக்கிறது. பின்னர் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மீண்டும் சிவப்பு நிறமாக மாறும்போது உடைக்கப்பட்ட அக்ரூட் பருப்புகளை எடுத்து சாப்பிடுகிறது. காகத்தின் புத்திசாலித்தனத்திற்கு இதுவே சாட்சி.

காகங்கள் எறும்புக்கூட்டை கலைத்து எறும்புகளை தன்னுடைய உடலில் விடும் என்ன காரணம் தெரியுமா? காகங்கள் எறும்புகள் அதிகளவில் இருக்கும் கூடுகளை தேடிச்சென்று எறும்புகளை கொத்தி எடுத்து இறகுகள் முழுவதும் பரவ விடுகின்றன. இதனால் கலக்கமடையும் எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை சுரக்கின்றன. இது காகங்களின் உடலில் சிறகுகளில் இருக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை விரட்டும் செயலை செய்கிறது.

வயலில் காய்கறிகளை சாப்பிடாமல் இருக்க விவசாயிகள் காகங்களை ஏமாற்ற மனிதர்களை போன்ற பொய் பொம்மைகளை வயலில் வைப்பார்கள். ஆனால் புத்திசாலித்தனமான காகங்கள் விரைவில் இதை கண்டுபிடித்து அந்த பொய் பொம்மைகள் மேலேயே அமர்ந்து தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபிக்கின்றன.

Related posts

Leave a Comment