November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

இந்த அழகான கிவானோ கொம்பு முலாம் பழத்தை நீங்கள் யாரும் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள்

பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான கண்ணைக் கவரும் வகையில் நாம் இதுவரை அறிந்திராத பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த உலகில் பரவி காணப்படுகிறது. அந்தவகையில் நம்மில் பலரும் அறிந்திராத அற்புதமான ஒரு பழத்தை பற்றி பார்ப்போம்.

கிவானோ(Kiwano) அல்லது கொம்பு முலாம்பழம்(Horned Melon). பார்க்கவே மிகவும் அழகாக வித்தியாசமாக இருக்கிறது இந்த கக்கூமிஸ் மெட்டூலிஃபெரஸ் பழம். இது பொதுவாக ஆப்பிரிக்கன் ஹாண்ட் குக்கும்பர், ஹாண்ட் மெலன், ஸ்பைக்டு மெலன், ஜெல்லி மெலன், கிவானோ இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பழத்தின் தோலில் கொம்பு போன்ற முட்கள் காணப்படுகிறது.

மஞ்சள் கலர் கொண்டுள்ள இந்த பழத்தின் உள்ளே பச்சைக்கலரில் விதைகள் ஜெல்லியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. இது வாழைப்பழம்,வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை கலந்த சுவையை கொண்டிருக்குமாம். இது தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. நமீபியா, போட்ஸ்வானா, சாம்பியா, ஜிம்பாப்வே, அங்கோலாவில் அதிகம் கிடைக்கிறது.

தற்போது இது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கிவானோ ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பாரம்பரிய உணவு செடி. இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வறண்ட காலங்களில் அதிகம் மக்கள் இதை சாப்பிடுவார்கள். இதை சிற்றுண்டியாக சாலட்டாக விரும்பி சாப்பிடுவார்கள் அங்குள்ள மக்கள்.

நன்றாக பழுக்கும்பொழுது விதைகள் வெளியே சிதறுவதற்காக இந்த பழம் வெடிக்குமாம். சிறிய அளவிலான உப்பு மற்றும் சர்க்கரை சுவையோடு இருக்குமாம். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

100 கிராம் பழத்தில் 44 கலோரிகள் இருக்கும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவிலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், கால்சியம், சோடியம் ஆகியவை குறைந்த அளவிலும் காணப்படுகிறது. இதன் விதைகளில் லினோலிக் மற்றும் ஓலிக் அமிலம் உள்ளிட்ட பல விதமான கொழுப்பு அமிலங்கள் உள்ளது.

இது பல விதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, வேகமாக வயது முதிர்ச்சி அடைவதை குறைப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, வளர்சிதைமாற்ற செயல்முறையை பராமரிப்பது, எலும்புகளை வலுப்படுத்துவது, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது, முடி வலிமையை மேம்படுத்துவது, ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, காயத்தை குணப்படுத்துவது இப்படி பல விதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

இந்த கிவானோ முலாம் பழத்தை அறை வெப்பநிலையில் சேமித்து வைத்தால் பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். இது கொடி வகையைச் சேர்ந்தது. வெள்ளரியை போல கொடியாக படர்ந்து அதில் பூ பூத்து காய் காய்த்து பழமாகிறது.

ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கிவானோ வாங்குவதற்கு சிறந்தது. பழுக்காத கிவானோ பச்சை நிறத்தில் கடினமாக இருக்கும். பழுக்கும் போது மஞ்சள் நிறமாகவும் அதன் பிறகு ஆரஞ்சு நிறமாகவும் மாறுகிறது.

இதை பச்சையாகவும் சாப்பிடலாம் பழுக்க வைத்தும் சாப்பிடலாம். 1930ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்காவிற்கு வெளியே இந்த பழம் பிரபலமாகவில்லை. அதன்பிறகு நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த சத்தான பழம் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கோடை மாதங்களில் இதனுடைய பருவகாலம்.

Related posts

Leave a Comment