November 27, 2022
அறிந்திராத உண்மைகள்

வெங்காயம் பற்றி உங்களில் பலரும் அறிந்திராத உண்மைகள்

வெங்காயம் உலகம் முழுவதும் ஏராளமான மக்களால் விதவிதமான சமையல்களில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய ஒரு அற்புதமான உணவுப் பொருள். பிரியாணி, இறைச்சி போன்ற பல முக்கியமான உணவுப் பொருட்களுக்கு அதிக சுவையை கொடுக்கக்கூடியதில் முன்னணியில் இருப்பது வெங்காயம்.

பண்டைய கிரேக்கர்கள் போருக்குச் செல்வதற்கு முன்னும் பின்னும் தங்களுடைய வீரர்களுக்கு அதிக அளவு வெங்காயத்தை சாப்பிடக் கொடுப்பார்கள். இது மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கிறது என அவர்கள் நம்பி இருக்கிறார்கள். அதுவும் உண்மையே வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

வெங்காயம் பண்டைய எகிப்தியர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளது. வெங்காயத்தின் ஒவ்வொரு வளையமும் வாழ்க்கையின் ஒவ்வொரு வட்டத்தை குறிக்கிறது என அவர்கள் நம்பி இருக்கிறார்கள். வெங்காயம் அதிக அளவு மந்திரசக்தி கொண்டது எனவும் அவர்கள் நம்பியிருக்கிறார்கள். பிரமிடுகளை கட்டிய தொழிலாளர்களுக்கு உணவாக வெங்காயத்தை கொடுத்திருக்கிறார்கள் எகிப்தியர்கள். இறந்தவர்களுடைய உடலை பதப்படுத்தி மம்மி ஆக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

உலகின் மிகப் பெரிய வெங்காயத்தின் எடை 8.5 கிலோ. இங்கிலாந்தின் ஹாரோகேட்டைச் சேர்ந்த டோனி குளோவர் என்பவர் 2014 ம் ஆண்டில் இந்த பெரிய வெங்காயத்தை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு வெங்காயம் கொடுக்கக்கூடாது. காரணம் வெங்காயம் நாயின் ரத்த சிவப்பு அணுக்களை பாதிக்கும். இது நாய்களுக்கு ரத்த சோகையை ஏற்படுத்தும்.

சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவில் வெங்காய சாகுபடி நடைபெற்றது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் பிறகு மிக வேகமாக வெங்காயம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதற்கு காரணம் இதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் குளிர்காலத்தில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

சராசரி அளவில் இருக்கும் ஒரு வெங்காயத்தில் 30 கலோரிகள் இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வெங்காயம் ஆண்மையை அதிகரிக்கும் மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எகிப்து, கிரீஸ் மற்றும் இந்தியாவின் பண்டைய நூல்கள் வெங்காயத்தின் சக்திவாய்ந்த திறன்களை சொல்கிறது. பண்டைய எகிப்தில் பிரம்மச்சாரி பூசாரிகளுக்கு வெங்காயம் உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் வெங்காயம் புதுமணத் தம்பதிகளுக்கு காலை மற்றும் இரவில் சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரியமான ஒரு முறையாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள பிரபலமான காய்கறி வகை பயிர்களில் வெங்காயம் 6வது இடத்தில் உள்ளது.

பண்டைய எகிப்தில் வெங்காயம் புனிதமாகக் கருதப்பட்டு வந்துள்ளது. பண்டைய எகிப்தில் பாரோக்களை அடக்கம் செய்யும் பொழுது வெங்காயத்தையும் சேர்த்து வைத்து அடக்கம் செய்துள்ளனர். இது அவர்களின் மறு உலகத்திற்கான பயணத்தில் அவசியம் என நம்பப்பட்டதால் இப்படி செய்யப்பட்டது.

பண்டைய ரோமானியர்கள் வெங்காயத்தை மிக முக்கியமான மருந்துப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர். முக்கியமாக தூக்கமின்மை பிரச்சனை, பல்வலி, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துவதற்காக இதை பயன்படுத்தி உள்ளனர். மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்கவும், வாய்ப் புண்களை குணப்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

லிபிய மக்கள் அதிகம் வெங்காயத்தை பயன்படுத்துகின்றனர். லிபியர்கள் ஆண்டுதோறும் சராசரியாக நபரொருவர் 31 கிலோ வெங்காயம் சாப்பிடுகிறார்.

Related posts

Leave a Comment