நாம் சாப்பிட்ட உடனே சில விஷயங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று அறிந்திருக்கிறோமோ, அதே போல் சாப்பிட்டவுடன் இவற்றை செய்யக்கூடாது எவற்றை தவிர்க்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு உண்டபின் நமது உடலில் சீரான இரத்த ஓட்டம் இருக்க வேண்டும். நாம் சில தவறுகளை செய்யும் பொழுது செரிமான உறுப்புகள் முறையாக செயல்பட போதிய இரத்தம் கிடைக்காது. எனவே நமது உடலுக்கு நாமே கெடுதல் விளைவிக்காது பார்த்து கொள்வது நல்லது. நம் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிட்டவுடன் படுக்க கூடாது, குளிக்கக்கூடாது இப்படி சிலவற்றை செய்யக்கூடாது என்பதை சொல்வதுண்டு. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்
சாப்பிட்டவுடன் படுக்க கூடாது. சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு சீரான இரத்த ஓட்டம் இருக்க வேண்டும். உண்டவுடன் அப்படியே தூங்கினால் செரிமானத்திற்கு தேவையான இரத்தம் கிடைக்காது என்பதால் செரிமான பாதிப்புகள் ஏற்படும்.
சாப்பிட்டவுடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழிந்த பிறகே குளிக்க வேண்டும். சாப்பிட்டவுடன் குளிக்கும் போது கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்கு செரிமானத்திற்கு செல்ல வேண்டிய போதிய இரத்த ஓட்டம் இல்லாது போகும். இதனால் நாளைடைவில் செரிமான உறுப்புகள் வலுவிழந்து காணப்படும்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் சிலருக்கு காணப்படுகிறது. அதனை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடனே க்ரீன் டீயோ, டீயோ குடிக்கக்கூடாது. ஏனெனில் தேயிலையில் உள்ள ஆசிட், உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி செரிமானத்தைத் தடைபடுத்தும். சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்து டீ குடிக்கலாம்.
சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் செரிமானமாகி விடும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். எனவே சாப்பிட்டு 3 லிருந்து 4 மணி நேரங்கள் கழிந்த பிறகே பழம் சாப்பிட வேண்டும். இல்லையெனில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பழத்தை சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டு முடித்தவுடனே உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது. சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளுக்கு அதிக இரத்தம் செல்லும். இதனால் செரிமான உறுப்புகள் முறையாக செயல்பட போதிய இரத்தம் கிடைக்காது. சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்த பிறகே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். பொதுவாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
சாப்பிட்டவுடன் சிகரெட் பிடிக்க கூடாது. சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட்டானது 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும். இதனால் புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
ஆகவே சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவற்றை தவிர்த்து நமது உடலை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்வோம்.