January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

ஆளில்லா பாலைவனத்தில் 36 அடி உயரத்தில் கை சிற்பம் மர்மம் என்ன

பாலைவனம் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மணல்மேடுகளாக காட்சியளிக்கும். அப்படி வெறுமனே இருக்கக்கூடிய ஒரு பாலைவனத்தில் ஒரு கை மட்டும் நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு இடம் பூமியில் இருக்கிறதா பார்ப்போம்.

மனோ டெல் டெசியர்டோ என்பது ஒரு கையின் பெரிய அளவிலான சிற்பம். வடக்கு சிலியில் உள்ள அடகாமா பாலைவனத்தில் அன்டோஃபாகஸ்டா நகரின் தெற்கு மற்றும் கிழக்கே பனாமெரிக்க நெடுஞ்சாலையில் சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நான்கு நீட்டிய விரல்கள் மற்றும் ஒரு கட்டைவிரல் மணலில் இருந்து வெளியே தெரியும் படி சிற்பம் இருக்கிறது. கடந்த காலத்தில் சிலி மக்கள் கடந்து வந்த மோசமான மனித உரிமைகளை சொல்லும் விதத்தில் இது உருவாக்கப்பட்டதாம்.

கடல் மட்டத்தில் இருந்து 1,100 மீட்டர் உயரத்தில் சிலி சிற்பியான மரியோ இரராசபல் என்பவரால் இந்த சிற்பம் கட்டப்பட்டது. இந்த மிகைப்படுத்தப்பட்ட கை அளவு சிலி மக்கள் அடைந்த பாதிப்பு மற்றும் உதவியற்ற தன்மையை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டுள்ளதாம். சாதாரண கைகள் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விட இப்படி இந்த பிரமாண்ட கைகள் அளவு சோதனைகளை சிலி மக்கள் எதிர்கொண்டதை இந்த சிற்பம் குறிக்கிறதாம்.

இந்த வேலைப்பாடுகள் இரும்பு மற்றும் கான்கிரீட்டின் உதவியால் செய்யப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 11 மீட்டர் அதாவது 36 அடி உயரம் கொண்டது. உள்ளூர் அமைப்பான கார்ப்பரேசியன் ப்ரோ அன்டோஃபாகஸ்டா சிற்பம் அமைக்க நிதியளித்து இந்த பிரமாண்ட கை சிற்பம் 28 மார்ச் 1992 அன்று திறக்கப்பட்டது. இந்த சிற்பம் பிரதான சாலையில் இருந்து 450 மீட்டர் தொலைவில் உள்ளது. வெகு தொலைவிருந்தே நீங்கள் இந்த சிற்பத்தை பார்க்க முடியும்.

Related posts

Leave a Comment