November 27, 2022
தகவல்

கிழிந்த நோட்டுக்கள் ஏடிஎம்மில் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் ? அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு…!

1967-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஏடிஎம், 1987-ஆம் ஆண்டு ஹெச்.எஸ்.பி.சி (HSBC)எனும் வங்கியால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின், இந்தியாவில் உள்ள இதர வங்கிகளும் ஏடிஎம்-மை பிரதானமாக்கின. தற்போது, வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பவர்களைவிட ஏடிஎம்-களில் பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

இன்றைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் ஏடிஎம்களில் தான் பணம் எடுக்கின்றனர். ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. அவ்வாறு நாம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது கிழிந்த நோட்டுகள் வரும் சம்பவங்களும் நடக்கிறது. ஏடிஎம்மில் இருந்து நோட்டை பெற்ற பிறகு, அதை மீண்டும் திரும்பப் போடவும் முடியாது. ஆனால் இதற்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை நீங்கள் நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

இதற்கு ரிசர்வ் வங்கி ஒரு வழி வகுத்துள்ளது. அதன்படி இனி இந்த கிழிந்த நோட்டுகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே ஏடிஎம் உடன் கூடிய வங்கிக் கிளைக்குச் சென்று இந்த நோட்டுகளை நாம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

சிதைந்த அல்லது கிழிந்த நோட்டுகள் ஏடிஎம்மில் இருந்து வந்தால் அவற்றை மாற்றுவதற்கு எந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கப்பட்டதோ அந்த வங்கியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில், ஏடிஎம்மில் பணம் எடுத்த தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். பணம் எடுத்த ரசீதையும் அதனுடன் இணைக்க வேண்டும். ரசீது இல்லை என்றால், உங்கள் மொபைலில் வந்த “எஸ்எம்எஸ்” விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

ஏடிஎம்களில் இருந்து பெறப்பட்ட ரசீதையும் வங்கியில் காட்ட வேண்டும், ரசீது இல்லை என்றால், வங்கியில் இருந்து பணம் எடுத்தவுடன் மொபைலுக்கு வரும் குறுஞ்செய்தியை காட்ட வேண்டும்.

இதுகுறித்து இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், “எங்கள் ஏடிஎம்களில் வைக்கப்படுவதற்கு முன்பு நோட்டுகள் அதிநவீன வரிசைப்படுத்தும் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்படுகின்றன. எனவே அழுக்கடைந்த அல்லது சிதைந்த நோட்டுகளை விநியோகிக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் எங்களுடைய எந்த கிளையிலும் கிழிந்த நோட்டுகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப் படி, கிழிந்த நோட்டுகளை நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியிலேயே மாற்றிக் கொள்ளலாம். அவற்றை மாற்றித் தர முடியாது என்று எந்த வங்கியும் மறுக்க முடியாது. அப்படி மறுக்கும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியே நடவடிக்கை எடுக்கும்.

எனவே உங்களுக்கு ஏடிஎம்களில் கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகள் கிடைத்திருந்தால் அதைத் தகுந்த ஆதாரத்துடன் வங்கிக் கிளையில் விண்ணப்பித்து மாற்று நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். கிழிந்த நோட்டுகள் குறித்து புகார் தெரிவிக்க எஸ்பிஐ வங்கியில் ஒரு வசதி உள்ளது. crcf.sbi.co.in/ccf/ என்ற இணையதளத்திற்குச் சென்று வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்.

Related posts

Leave a Comment