இறந்த பிறகு சூரியன் எப்படி இருக்கும்? நமது சூரிய மண்டலத்தின் முடிவு எப்படி இருக்கும். அது எப்போது நடக்கும் என்பதை பற்றி விஞ்ஞானிகள் இப்பொழுது கணித்துள்ளனர். ஆனால் சூரியன் இறந்துபோகும் இந்த இறுதிச் செயலைக் காண மனிதர்கள் அருகில் இருக்க மாட்டார்கள் என சொல்லியிருக்கிறார்கள்.
நம்மை வாழவைக்கும் சூரியன் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதே நேரத்தில் உருவான சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற பொருட்களின் வயதை விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். மற்ற நட்சத்திரங்களின் தோற்றம் அடிப்படையிலான ஆராய்ச்சியில் இன்னும் 10 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன்னுடைய வாழ்வின் முடிவை எட்டும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையே சூரியனில் பல மாற்றங்கள் நிகழும். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் ஒரு மாபெரும் சிவப்பு கோளமாக மாறும். சூரியனின் மையப்பகுதி சுருங்கிவிடும். அதன் வெளிப்புற அடுக்குகள் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விரிவடைந்து இந்த செயல்பாட்டில் நமது பூமியை முழுவதும் விழுங்கிவிடும்.
ஒன்று மட்டும் நிச்சயம். அந்த நேரத்தில் பூமியிலிருந்து செல்ல ஒரு வழியைக் கண்டுபிடிக்காவிட்டால் மனிதர்களாகிய நாம் அந்த நேரத்தில் உயிருடன் இருக்க மாட்டோம். மனிதகுலம் பூமியில் வாழ இன்னும் சுமார் 1 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு பில்லியன் வருடங்களுக்கும் சூரியன் தன்னுடைய வெளிச்சத்தை 10 சதவிகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த மாறுபாடு பெரிதாகத் தெரியாது. ஆனால் இப்படி சூரியனின் வெளிச்சம் தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது பூமியில் உள்ள உயிர் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும். நமது பெருங்கடல்கள் ஆவியாகி புவி மேற்பரப்பு தண்ணீர் உருவாக முடியாத அளவுக்கு சூடாக மாறும்.
ஒரு நட்சத்திரம் இறக்கும் போது அது வாயு மற்றும் தூசியை அதிகம் வெளியேற்றும். இது உறை போன்ற அமைப்பை ஏற்படுத்தும். அதாவது ஒரே புழுதி மண்டலம் இருப்பது போல் இருக்கும். இந்த உறை போன்ற அமைப்பு நட்சத்திரத்தின் நிறையில் பாதி அளவுக்கு இருக்கும். இது நட்சத்திரத்தின் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இயங்குகிறது என்பதை குறிக்கிறது. இறுதியில் எரிபொருள் இல்லாமல் நட்சத்திரம் இறந்து போகும் நிலையை அடைகிறது.
அப்போதுதான் சூடான மையத்தால் வெளியேற்றப்பட்ட உறை சுமார் 10,000 ஆண்டுகளுக்கு மிகவும் வெளிச்சமாக பிரகாசிக்க வைக்கிறது. வானியலில் இது ஒரு குறுகிய காலம். இப்படி மிகவும் பிரகாசமாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகளை தாண்டி மிகப் பெரிய தூரத்தில் இருக்கும் கிரகத்தை கூட நம்மால் பார்க்க முடியும். இப்படி ஏற்படும் நிகழ்வுகளை வானியலாளர்கள் பிளானெட்டரி நெபுலா(planetary nebula) என அழைத்தனர்.
இப்படி பல கிரக நெபுலாவை கண்டுபிடித்துள்ளனர். ஹெலிக்ஸ் நெபுலா, கேட்ஸ் ஐ நெபுலா(Cat’s Eye Nebula), ரிங் நெபுலா மற்றும் பபிள் நெபுலா (Bubble Nebula) உள்ளிட்ட பிரபஞ்சம் முழுவதும் காணக்கூடிய கிரக நெபுலாக்கள் பல உள்ளன.
தொலைதூர விண்மீன் திரள்களில் இருக்கும் இந்த நெபுலாக்களை ஆய்வு செய்ததன் மூலம் நம்முடைய சூரியன் எப்பொழுது இறக்கும். அப்படி இறக்கும் முன்னர் என்ன நடக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உள்ளது. அதற்க்கு நம்முடைய பூமி, சூரியனும் விதிவிலக்கல்ல. என்ன இவைகள் நடக்க இன்னும் 10 பில்லியன் ஆண்டுகள் உள்ளது. ஆகையால் இவைகளை பற்றி கவலை படாமல் நம்முடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வோம் நம்பிக்கையோடு.