September 28, 2022
அறிந்திராத உண்மைகள்

பலருக்கும் தெரியாத அபூர்வ அயினி பழம்

நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது தான் அயினி பழம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு பழம். கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் இந்த பழம் மிகவும் பிரபலம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்பொழுது இந்த அயினி பழங்கள் தொடர்ந்து அழிந்து வருகிறது. ஆனால் கேரளாவில் இப்பொழுதும் பல இடங்களில் இந்த அயினி பழம் கிடைக்கிறது.

கேரளாவில் இதை அயினி சக்க, அஞ்சிலி சக்க என சொல்வார்கள். இந்தப் பழம் வைல்ட் ஜாக் ஃப்புரூட்(Wild Jackfruit) எனவும் அழைக்கப்படுகிறது. இதனுடைய பொதுவான பெயர் ஆர்டோகார்பஸ் ஹிர்சுடஸ்(Artocarpus hirsutus). இது காட்டுப்பலா எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப்பழம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. கேரளாவில் அதிக அளவில் உள்ளது. அதைத் தாண்டி கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது.

இது பொதுவாக நல்ல ஈரமான இலையுதிர் காடுகளில் வளர்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரையிலான இடங்களில் வளர்கிறது. ஆண்டிற்கு 1500 மில்லி மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மழை பொழியும் இடங்களில் இது வளர்கிறது. இந்த அயினி மரங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு சொந்தமானவை என சொல்லப்படுகிறது. அங்குள்ள பசுமையான காடுகளில் அதிகம் காணப்படுகிறது.

இந்த மரம் தோராயமாக 35 மீட்டர் உயரம் வரைக்கும் வளரக்கூடியது. மேலும் வளர்ந்த மரத்தின் பருமன் சுமார் 4.5 மீட்டர் வரைக்கும் இருக்கும். நல்ல விளைந்த அயினி மரம் மர சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த அயினி பழம் பார்ப்பதற்கு பலாப்பழத்தைப் போல வெளியில் முட்களுடன் நம்முடைய ஒரு கையில் பிடிக்கும் அளவில் இருக்கும். பழுத்ததும் இதனுடைய முட்கள் போலிருக்கக்கூடிய வெளிப்புறத் தோலை உரித்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் பழம் இருக்கும்.

இந்த பழத்தினுள் வெள்ளை நிறத்தில் கொட்டை இருக்கும். இந்த பழம் மிகவும் வித்தியாசமான அற்புதமான ஒரு சுவையை கொண்டிருக்கும். இதைச் சாப்பிட்டு பார்த்தவர்களுக்கே தெரியும் அதனுடைய அற்புதமான சுவையை பற்றி. சமீபத்தில் இந்த பழம் ஒரு கிலோ 200 ரூபாய் அளவில் சாலையோரத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த பழங்கள் இயற்கையாகவே உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடிய பழங்கள்.

வயிற்றில் ஏற்படக்கூடிய புண்கள், வயிற்றுப்போக்கு, பருக்களை குணப்படுத்த கூடிய தன்மை இந்த பழத்திற்கு உண்டு என சொல்கிறார்கள். இந்த பழத்தின் விதைகளை வறுத்து பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிடும்போது ஆஸ்துமா பிரச்சனை குணமடையும். அயினி பழத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த எண்ணெய் என சொல்லப்படுகிறது.

Related posts

Leave a Comment