August 18, 2022
செய்திகள்

பிங்க் நிறமாக மாறுகிறது மகளிர் பேருந்துகள் – உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்…

மகளிர் இலவச பேருந்துக்கள் “பிங்க்” கலரில் மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த திட்டங்களில் முதன்மையானது மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் ஆகும். கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், அனைத்து மகளிருக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஆட்சிக்கு வந்தபின்னர் பணிபுரியும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் உள்பட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக, தனியே பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மாநகரம் முதல் கிராமம் வரை பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திட்டமாகும். இத்திட்டம் மூலம் அன்றாடம் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மாநகர அரசு பேருந்து அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் சில பேருந்துகளில் நடத்துனர், பெண்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

தற்போது அந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அந்தப் பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு அதாவது, “பிங்க்” வண்ணம் பூசப்படுகின்றது. இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

Related posts

Leave a Comment