January 31, 2023
அறிந்திராத உண்மைகள்

சிறுநீருக்கு வரி என மக்களிடம் ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் கொடூரமாக வரி விதித்திருந்தார்கள் தெரியுமா

வரி நம்முடைய அரசாங்கத்தை வழி நடத்துவதற்கு இந்த வரி தான் முக்கியம் என பலரும் சொல்ல நாம் கேட்டிருப்போம். ஆனால் பல காலங்களாக கொடுமையான வரிகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மக்கள் மிகப்பெரிய கொடுமைகளையும் அனுபவித்து இருக்கிறார்கள். எப்படி இந்த வரிகள் மக்களை கொடுமைப்படுத்தி இருக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

1. மார்பகத்தை மறைப்பதற்கு வரி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர் அதாவது கேரளாவை சேர்ந்த மன்னர் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் வெறும் மார்போடு இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அவர்கள் விதியை மீறி மார்பகங்களை மூடினால் அதற்காக அவர்கள் வரி செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார். இந்த நடைமுறையை கொடூரமாக எதிர்த்தவர் நாகாளி என்ற பெண். இந்தக் கொடுமையான வரியைக் கண்டு மனம் கொதித்து இவர் செய்த செயல் எல்லோரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி இவர் கொடூரமாக என்ன செய்தார் தெரியுமா. இவர் தன்னுடைய மார்பகங்களில் ஒன்று வெட்டி ராஜாவின் முன் வைத்தார். அவர் இறந்தாலும் இந்த நியாயமற்ற கொடூரமான வழிமுறை அதோடு நிறுத்தப்பட்டது. மிகப் பெரிய மன உறுதி கொண்ட சிங்கப்பெண். தான் இறந்தாலும் மிகப்பெரிய ஒரு வரி கொடுமையில் இருந்து பெண்களை விடுவித்தவர் இவர்.

2. ஜன்னல்களுக்கு வரி

இங்கிலாந்தில் உள்ள மக்களுக்கு வித்தியாசமான ஒரு வரி இருந்து வந்தது. அதாவது மக்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய ஜன்னல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டிய ஒரு காலம் இருந்தது. ஆனால் 1851 ஆம் ஆண்டில் ஜன்னல்கள் இல்லாமல் இருப்பது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என தெரிந்த பிறகு இந்த வரி திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அதற்கு முன்னால் இருந்ததை நினைத்துப் பாருங்கள்.

வீட்டில் ஜன்னல் இருந்தால் அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். எப்படி அந்த மக்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். வீட்டில் ஜன்னல் இல்லாமல் இருந்தால் எப்படி காற்றோட்டம் இருக்கும். மிக கொடூரமான வரியை நம்மைவிட படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்தில் கூட அங்கு ஆட்சி செய்தவர்கள் போட்டிருக்கிறார்கள். கொடுமையான ஆட்சி காரர்கள். மக்களை மிகவும் ஏமாளிகளாக நினைத்திருப்பார்கள் போலும்.

3. செங்கற்களுக்கு வரி

ஆனால் மக்களை எல்லாம் எப்படி கொடுமை படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள். வீட்டிற்கு தேவையான செங்கற்களுக்கு வரி விதித்து இருக்கிறார்கள். நல்லவேளை நம்முடைய நாட்டில் இது நடந்ததா என தெரியவில்லை இது மெத்தப்படித்த இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. 1700களில் இங்கிலாந்து செங்கற்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. செங்கல் தயாரிப்பாளர்கள் என்ன விட்டு வைப்பார்களா அவர்கள் சாதாரணமாக தயாரிக்கக்கூடிய செங்கற்களை விட பல மடங்கு பெரிய செங்கற்களை உருவாக்க தொடங்கியிருக்கிறார்கள்.

செங்கல்லுக்கு தானே வரி அதை மிகப்பெரிதாக தயாரித்தால் என்ன அப்படி அவர்கள் நினைத்து பிரமாண்டமான செங்கற்களை எல்லாம் தயாரித்திருக்கிறார்கள். ஒருவழியாக இதையெல்லாம் கவனித்த அரசாங்கம் 1850 ஆம் ஆண்டில் இந்தச் செங்கலுக்கான வரியை அகற்றி இருக்கிறது. ஒருவேளை செங்கற்கள் எதுவும் விற்காமல் இருந்திருக்கலாம். அரசாங்கத்திற்கு வருமானம் வராமல் இருந்திருக்கலாம். மக்கள் கொடுக்கும் பதிலடியே அரசாங்கம் வழிக்கு வர முக்கிய காரணம்.

4. தாடிக்கு வரி

யப்பா இருந்தாலும் இது ஆண்களுக்கு கொஞ்சம் மோசமான தகவல் தான். ஆண்கள் மிக அழகாக பார்த்து பார்த்து சுவாரசியமாக வளர்க்கக்கூடிய தாடிக்கு வரி விதித்திருக்கிறார்கள். 1705 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மன்னரான கிங் பீட்டர் ஆண்கள் வளர்க்கக்கூடிய தாடிக்கு வரி விதித்திருக்கிறார். இதனால் ஆண்கள் அனைவரும் தாடியை இழக்க வேண்டியது இருந்தது. இல்லையென்றால் அவர்கள் தாடிக்கு வரி கட்ட வேண்டும். இது அந்த நேரத்தில் ரஷ்யாவை நவீனமயமாக்க அதாவது மேற்கத்திய மயமாக்க முனைந்ததன் விளைவாக இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான வரி போடப்பட்டது.

5. புகைப்போக்கி வரி

எரிவாயு அடுப்பு வருவதற்கு முன்னால் எல்லோருடைய வீட்டிலும் விறகு அடுப்பு காணப்பட்டது. இந்த விறகை அடுப்பில் வைத்து எரிக்கும் போது அதிலிருந்து வரக்கூடிய புகையை வெளியேறுவதற்காக வீடுகளில் சிம்னி வைத்திருப்பார்கள். இந்த சிம்னி எனப்படும் புகைபோக்கி வழியாக புகையானது வெளியே செல்லும். இதற்கும் ஒரு காலத்தில் வரி அறிவித்திருக்கிறார்கள்.

1660 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து புகை போக்கிக்கு வரி விதித்திருக்கிறது. இந்த வரியை செலுத்தாமல் தவிர்ப்பதற்காக மக்கள் நெருப்பு பயன்படுத்தும் இடங்களை மறைத்திருக்கிறார்கள். சிம்னி வேண்டாம் புகை எக்கேடு கெட்டாவது போகட்டும் என நினைத்து புகைபோக்கியை எடுத்து கடாசி இருப்பார்கள். இந்த வித்தியாசமான வரியானது இறுதியாக 1689 ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது.

6. சிறுநீருக்கு வரி

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த கெட்ட கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரை கண்டிப்பாக சரியான நேரத்தில் கழித்தே ஆக வேண்டும். இல்லை என்றால் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த சிறுநீரைக் கழிப்பதற்கும் வரி விதித்திருக்கிறார்கள். பண்டைய ரோமில் சிறுநீர் ஒரு விலை உயர்ந்த பொருளாக இருந்ததாம். இதில் அமோனியா இருப்பதால் துணிகளை சுத்தம் செய்யவும், பற்களை சுத்தம் செய்யவும் சிறுநீரை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட காரியத்திற்கெல்லாம் சிறுநீரை பயன்படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள். ரோமில் உள்ள பொது சிறுநீர் கழிக்கும் இடங்களில் இருந்து சிறுநீரை வெளியேற்ற விதிக்கப்பட்டிருக்கிறது. பாவம் பொது மக்கள் சிறுநீர் கழிப்பதற்கு வரி விதிக்காமல் விட்டார்களே. அந்த வகையில் ரோமர்கள் தப்பித்து விட்டார்கள்.

7. சமையல் எண்ணெய்க்கு வரி

பண்டைய எகிப்தில் மக்கள் சமையல் எண்ணெய்க்கு வரி செலுத்த வேண்டி இருந்ததாம். இந்த வரியை வசூலிப்பவர்கள் மக்கள் வரி செலுத்திய எண்ணையை மட்டுமே வாங்குகிறார்களா என்பதையும் வேறு வழிமுறையில் வரி செலுத்தாமல் வாங்காமல் இருப்பதையும் உறுதி செய்ய கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

8. சீன மக்கள் மீது வரி

பொதுவாக அந்தக் காலத்தில் மக்கள் வணிக நோக்கோடு ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்து அந்த நாட்டில் சென்று பொருட்களை வியாபாரம் செய்து வருவார்கள். இப்படி சீனர்கள் கனடாவிற்குள் செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு கனடா வரி விதித்து இருக்கிறது. இதற்கு சைனீஸ் ஹெட் டேக்ஸ் அதாவது சீன தலை வரி என்ற பெயரில் கனடாவிற்குள் சீனர்கள் நுழைந்தால் வரி விதித்து இருக்கிறார்கள். 1923ஆம் ஆண்டில் இருந்து இப்படி சீனர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரி தடை செய்யப்பட்டது.

9. உப்பு வரி

நம்முடைய உணவிற்கு சுவையை கூட்டுவது உப்பு. ஒரு காலத்தில் உப்பு தங்கத்தைவிட விலை உயர்ந்ததாக இருந்துள்ளது. வேலை செய்ததற்கு கூலியாக வேலையாட்களுக்கு உப்பை சம்பளமாக கொடுத்த காலங்கள் கூட இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ பல நாடுகளில் இந்த உப்புக்கு வரி விதித்திருக்கிறார்கள். 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் உப்புக்கு வரி போடப்பட்டிருக்கிறது. இது மக்களால் விரும்பத்தகாத ஒன்றாக இருந்திருக்கிறது.

இந்த வரி விதிப்பே உண்மையில் பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது. கடைசியாக இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 இல் இந்த வரி ரத்து செய்யப்பட்டது. நம்முடைய இந்தியாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்பு வரி இருந்தது. அதற்கு எதிராக பல போராட்டங்களும் நடந்தது. சாப்பிடக்கூடிய உணவில் சேர்க்கக் கூடிய உப்புக்கு வரி விதித்த கொடூர ஆட்சிகள் எல்லாம் இருந்திருக்கிறது பாருங்கள்.

10. தொப்பி வரி

தொப்பி அணிவதற்கு எல்லாம் வரி விதித்திருக்கிறார்கள். அதிலும் ஆண்கள் அணியும் தொப்பிக்கு வரி விதித்திருக்கிறார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டினுடைய கடனை அடைப்பதற்காகவாம். பிரிட்டனின் பிரதமர் வில்லியம் பிட் 1784 ஆம் ஆண்டு தேசிய கடனை அடைப்பதற்காக இளம் வயது ஆண்கள் அணியக்கூடிய தொப்பிக்கு வரி அறிவித்திருக்கிறார்.

ஆண்கள் தொப்பி அணிய வேண்டும் என்றால் வரி செலுத்தி அவர்கள் தொப்பிக்கு உள்ளால் வரி செலுத்தியதற்கான ஒரு முத்திரை போடப்பட்டிருக்கும். அரசாங்கம் இந்த வரியை விதிப்பதற்கு மிக தீவிரமாக இருந்துள்ளது. வரி கட்டாமல் இந்த சட்டத்திற்கு கீழ்படியாதவர்களுக்கு மரண தண்டனை என சட்டம் போட்டுள்ளது. இந்த வரியானது 1811 இல் ரத்து செய்யப்பட்டது.

11. கோழை வரி

என்னது கோழைக்கு வரியா என்ன வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா! அதிலும் ஒரு காரணம் இருக்கிறது. இது சண்டையிடும் போட்டிகளிலிருந்து விலகுவதற்காக போடப்பட்ட வரி. அதாவது மன்னர்களுடைய ஆட்சிகாலத்தில் சண்டைப் போட்டி நடைபெறும். அதாவது மாவீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். இந்த சண்டையில் போட்டியிட முடியாமல் போதும்டா சாமி என வெளியேற்றக்கூடிய மாவீரர்கள் அதற்கு வரி செலுத்திவிட்டே வெளியேற முடியும். இங்கிலாந்தின் மன்னர் ஒன்றாம் ஹென்றி இந்த வரியை விதித்திருக்கிறார்.

12. விக் பவுடர் வரி

1700களில் இங்கிலாந்தில் விக் பொடிகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி 1700களின் பிற்பகுதியிலும் 1800 களின் முற்பகுதியிலும் பிரான்ஸ் உடனான அரசாங்கத் திட்டங்கள் மற்றும் போர்களுக்கு நிதியளிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பவுடர் அடிப்படையில் விக்கில் மணம் சேர்க்கவும் வண்ணத்தை சேர்க்கவும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொடி

13. கழிப்பறை பிளஷ் வரி

கழிப்பறையில் நீங்கள் தண்ணீரை திறந்து விட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டும். எங்கு தெரியுமா? அமெரிக்காவில். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் தண்ணீரின் பயன்பாட்டை குறைப்பதற்காக நீங்கள் கழிப்பறையில் உள்ள பிளஷ் டேங்கை எத்தனை தடவை உபயோகிக்கிறீர்களோ அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டுமாம். எப்படி எல்லாம் வித்தியாசமாக வரி போடுகிறார்கள் பாருங்கள்.

Related posts

Leave a Comment